ஒருமுறை சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை உச்சரித்து கொண்டு வந்தார். பார்வதி தேவி, எம்பெருமானை பார்த்து கேட்டாள், “சுவாமி, நீரே எல்லோருக்கும் மேலான கடவுள். அப்படியிருக்க, நீர் ஏன் இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்.
சிவன், அதற்கு “தேவி, ‘ராம’ என்ற எழுத்து 2 விஷயங்களை குறிக்கிறது. ஒன்று, ‘ராம’ என்பது தான் பிரம்மம். இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது. ராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“
இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள்.சிவன் சொன்னார். தேவி, கவலை வேண்டாம். பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன் என்றார். பார்வதியும் சமாதானமாகி சுவாமியுடன் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை பற்றி விவாதிக்க தயாரானாள். பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம் ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது.
ஏன், குரங்கு அவதாரம்? பரமேஸ்வரன் விளக்குகிறார். மனிதனாக அவதாரம் எடுத்தால், அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும். எஜமானனை விட சேவகன் ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும். இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு என்றார்.