ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி 18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். அங்கு பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவார்கள். பின்னர் அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். இந்த விழாவில் சிறப்பு அம்சமாக ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள்.