ஸ்ரீ சக்கரத்தை எவ்வாறு வழிபடவேண்டும்...?

ஸ்ரீ சக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். 

ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள்,  விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். 

பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம்,  குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.
 
வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட  மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும். வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு  செய்தல் வேண்டும்.
 
பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள்,  ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.
 
ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம்  சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். 
 
அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்