வாகனங்களுக்கு துணைநிற்கும் முப்பந்தல் இசக்கியம்மன்

திங்கள், 6 ஏப்ரல் 2009 (17:38 IST)
webdunia photoWD
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் வள்ளியூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலைக் கடந்து செல்லும் வாகனங்கள் கோயிலுக்கு அருகே நிறுத்தி, அம்மனை வழிபடுவதுடன் தங்களால் முடிந்த காணிக்கைகளையும் செலுத்துகிறார்கள்.

கோயிலுக்கு அருகிலேயே சாலையோரத்தில் மிகப்பிரமாண்டமான இசக்கியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோயில் நோக்கிச் செல்லும் அல்லது அங்கிருந்து திரும்பும் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் கண்டிப்பாக அம்மன் கோயில் அருகே நின்று, அதில் பயணிப்பவர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றால் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களில் இருந்து பாதுகாப்பதுடன், தாங்கள் செல்லக்கூடிய காரியங்களும் வெற்றியடையும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது.

அதேபோல் அரசுப் பேருந்துகள் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் பகுதியைக் கடக்கும் போது, பேருந்தில் பயணிப்பவர்கள் சாலையில் கோயிலை நோக்கி தங்களின் காணிக்கைகளை வீசுகிறார்கள்.

அந்த காணிக்கைகளை கோயில் அருகில் இருப்பவர்கள் எடுத்து உண்டியலில் சேர்ப்பிக்கிறார்கள்.

தவிர, வாகனங்களின் ஓட்டுநர்களும் தங்களின் வண்டிகளுக்கு இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்வதையும் காண முடிகிறது.

webdunia photoWD

நெடுஞ்சாலையின் வளைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில், வழிபட்டுச் செல்வோருக்கு விபத்துகள் நேராது என்பதே ஐதீகம். இங்குள்ள அம்மன் வாகனங்களுக்கு வழித்துணையாக வந்து, விபத்தில் இருந்து காத்து அருள்வதாக அங்கு வரும் வாகன ஓட்டிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

ஆடியில் அமர்க்களம்

முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும்.

சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மாட்டு வண்டிகள் முதல் கார், ஜீப் உள்ளிட்ட பல வாகனங்களில் வந்து குழுமி, ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

இந்த நாளில் முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தவிர தை மாதத்தில் மலர் அபிஷேகமும் நடைபெறுகிறது. இக்கோயிலில் நடைபெறும் மலர் அபிஷேகத்தைக் காண கண் கோடி வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்