இந்த வாரப் புனிதப் பயணத்தில் உங்களை நாங்கள் காக்கும் கடவுளாகிய ஸ்ரீ ஷேத்ர மனுதேவி கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம். மத்தியப் பிரதேசத்தையும் மராட்டியத்தையும் பிரிக்கும் சாத்பூரா மலைத் தொடரில் பசுமையான அடர்ந்த வனப்பகுதியில் அழகிய நீர்வீழ்ச்சிக்கு அருகில் மனுதேவி கோயில் அமைந்துள்ளது.பழமை வாய்ந்த மனுதேவி கோயில் மராட்டியத்தில் யாவல்- சோப்ரா நெடுஞ்சாலையின் வடக்கு முனையில் காசர்கெட்- அட்கான் கிராமங்களில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி அடந்த பசுமையான வனமும் உயர்ந்த மலைகளும் அமைந்துள்ளன. சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் இங்கு வந்து மனுதேவியின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
கி.மு.1200இல் சாத்பூரா மலைத் தொடருக்கு அருகில் 'கெளலி வாடா' என்ற பகுதியில் ஐஸ்வர்சென் அன்ற அரசர் ஆண்டு வந்தார். அவரிடம் ஏராளமான கால்நடைகள் இருந்தன. தாகம் ஏற்படும்போது அவற்றில் சில மராட்டியத்தில் உள்ள தபதி ஆற்றிற்கும், சில மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா ஆற்றிற்கும் தண்ணீர் குடிப்பதற்காகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் 'மான்மூடி' என்ற கொள்ளை நோய் அந்தப் பகுதியைத் தாக்கியது. கந்தேஷ் பகுதி முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டது. சாத்பூரா மலைத் தொடர் முழுவதும் மான்மூடி நோய் பேரழிவை உண்டாக்கியது.
இந்த நோயில் இருந்து மக்களையும் கால்நடைகளையும் காக்க முடியாமல் தவித்து வந்த அரசர் ஐஸ்வர்சென் கி.மு.1250 இல் கெளலி வாடாவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மனுதேவியின் கோயிலிற்குச் சென்று வழிபாடு செய்ததாகவும், இதையடுத்து மான்மூடி நோய் விலகியதாகவும் வரலாறு கூறுகிறது. இதற்கு ஆதாரமாக மனுதேவி கோயிலிற்கும் கெளலி வாடாவிற்கும் இடையில் 13 அடி அகலமுள்ள சுவர் உள்ளது.
பிசாசுகளிடம் இருந்தும் மான்மூடி நோயில் இருந்தும் மக்களைக் காப்பதற்காகவே மனுதேவி வீற்றிருக்கிறாள் என்று புராணக் கதைகள் கூறுகின்றன.
பகவதி புராணத்தில் கூட சாத்பூரா மலைத் தொடரின் வனங்களுக்குள் மனுதேவி வீற்றிருப்பதாகவும் அதனால் பயப்பட வேண்டாம் என்றும் கிருஷ்ணன் அருளுகிறார்.
மனுதேவி கோயில் வளாகத்திற்குள் 7 முதல் 8 கிணறுகள் உள்ளன. மனுதேவி சிலையுடன், விநாயகர் சிலை, சிவ லிங்கம், அன்னபூரணி தேவி சிலை ஆகியவையும் உள்ளன. கோயிலைச் சுற்றிலும் உயர்ந்த மலை முகடுகள் கண்களுக்குக் குளிர்ச்சியாக பசுமைப் போர்வை போர்த்தி காணப்படுகின்றன. கோயிலிற்கு அருகில் பார்த்தாலே பரவசமும் வியப்பும் தரக்கூடிய 'கவ்தால்' என்ற நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு 400 அடி உயரத்தில் இருந்து விழும் குளிர்ந்த நீர் யாராக இருந்தாலும் மூச்சு முட்டச் செய்துவிடும்.
ஒவ்வொரு வருடமும் 4 முறை பக்தர்கள் இந்தக் கோயிலிற்கு வருகின்றனர். நவராத்தியின்போது 10 நாட்களும் வருகின்றனர். புதிதாகத் திருமணமான தம்பதிகள் இந்தக் கோயிலிற்கு வந்து வழிபட்டால் அவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பது மராட்டிய மக்களின் நம்பிக்கை. முன்பெல்லாம் இந்தக் கோயிலிற்கு வருவதற்கு காடுகளையும் பாறைகளையும் கடந்து நடக்க வேண்டும். தற்போது முறையான சாலை வசதிகளைச் செய்வதற்கு மராட்டிய அரசும், மனுதேவி கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளன.
எப்படிச் செல்வது:-
சாலை மார்க்கம்: புசாவல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாவல் என்ற இடத்தில் இருந்து மனுதேவி கோயிலிற்குப் பேருந்து வசதி உள்ளது.
இரயில் மார்க்கம்: புசாவல் இரயில் நிலையம் நமது நாட்டின் பிற இரயில் மார்க்கங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
விமான மார்க்கம்: புசாவல் நகரில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் அவுரங்காபாத் விமான நிலையம் அமைந்துள்ளது.