தடம் மாற்றிய வெந்த பன்றியின் கறிச் சுவை!

சனி, 12 டிசம்பர் 2009 (13:57 IST)
தனது வாழ்விலோ அல்லது செய்யும் தொழிலிலோ தான் கடைபிடித்துவந்த, கட்டிக் காத்துவந்த கொள்கையை ஒரு மனிதன் விட்டுவிட்டுப் பாதை மாறிடும் போது, அதனால் ஏற்படும் (தீய) விளைவுகள், அவனுடைய வாழ்வையும், தொழிலையும் மட்டுமே பாதிப்பதில்லை. அப்படிப்பட்ட மனிதனை அல்லது நிறுவனத்தைச் சார்ந்துள்ள மக்கள் அல்லது சமூகத்தை அந்தத் தடுமாற்றம் எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை ஒரு நிகழ்வும், அந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகமும் விளக்கியது.

நாட்டு நடப்பையும், அது சார்ந்த அரசியலையும் செய்தியாக அளிப்பதோடு நிற்காமல், நிகழ்வுகளுக்கான காரணத்தையும், பிரச்சனைகளின் ஆழத்தையும் தெளிவாக எடுத்துரைத்து வாசகர்களை விவரப்படுத்தும் சமூகக் கடமையுள்ள ஊடகங்கள், தடம் புரண்டு, நிகழ்வின் காரணத்தை மறைத்தும், உண்மையைத் திரித்தும் கூறும்போது அது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை விளக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

WD
சென்னை தியாகராயர் நகரில் நவம்பர் முதல் தேதி நடந்த அந்நிகழ்வின் மையமாக இருந்தது, நமது நாட்டின் படித்த மக்களிடையே பரவலாக அறியப்பட்டு, மதிப்பு வாய்ந்ததாக கருதப்படும் ‘தி இந்து’ நாளிதழே. தி இந்துவில் ஒரு செய்தி வெளியாகிறது என்றால் அதுதான் உண்மை, அதில் நடந்தது நடந்தபடியே செய்தியாக இருக்கும், அதன் தலையங்கத்தில் நியாயம் இருக்கும், அந்நாளிதழில் வெளிவரும் கட்டுரைகளில் உண்மை இருக்கும் என்றெல்லாம் நீண்ட நெடுங்காலமாக மதிப்பிடப்பட்டுவரும் நிலையில், அது தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திய மே 17 இயக்கத்தினர், அன்று ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். ‘பத்திரிக்கை அறமும் இந்து என். ராமும்’ என்ற அப்புத்தகத்தில், ஈழம், நந்திகிராம், லால்கர், திபெத், காஷ்மீர், பலுசிஸ்தான், வசிரிஸ்தான் ஆகிய உலகத்தின் பார்வை பதிந்த இடங்களில் நடந்த நிகழ்வுகளையும், வெகு மக்கள் போராட்டங்களையும் தி இந்து நாளிதழ் எவ்வாறு உண்மைக்கு முரணாக சித்திரித்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, அதற்கு ஆதாரமான தகவல்களையும், கட்டுரைகளையும் திரட்டி அளித்துள்ளது.

“கேள்விக்குட்படுத்தப்படாத ஊடக பாசிசம் நம்மை அபாயகரமானதொரு எதிர்காலத்திற்குள் தள்ளிவிடும்” என்ற எச்சரிக்கையுடன் நம்மை உள்ளிழுக்கும் அந்தப் புத்தகத்தில், இலங்கையில் தனது நாட்டு மக்களையே குண்டு வீசிக் கொன்ற ராஜபக்ச அரசை விமர்ச்சித்து எழுதி, அதற்காகத் தனது உயிரையே விலையாகக் கொடுத்த கொழும்புப் பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்கவின் கடிதத்தை வெளியிட்டு, அதே நேரத்தில் அப்படி ஒரு துணிந்த விமர்சனத்தை முன்வைக்கத் தவறிய இந்து ராம் குறித்து மருதன் எழுதிய ஒப்பீட்டுக் கட்டுரையும் அப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

“என்.ராமின் பத்திரிக்கை தர்மத்திற்கும், லசந்த விக்கிரமதுங்காவின் பத்திரிக்கைத் தர்மத்திற்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தாவே சொல்லியிருக்கிறார்: ‘உயர் பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்திற்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனசாட்சி’ என்ற கூறியுள்ள மருதன், “லசந்த தன் மனசாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவில்லை” என்று கூறி முடிக்கிறார்.

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் எப்படி ஒரு நீதியான பாதையில் நடக்கத் துவங்குகிறானோ அதே போலவே இவரும் நடந்துள்ளார். ஆனால் தடத்தை மாற்றியது எது? என்பதற்கு மாதவி எழுதிய ‘என். ராம் - வெந்த பன்றியின் கதை’ யை அப்புத்தகம் பதிலாய்த் தருகிறது.

“சீன நாட்டு கிராமம் ஒன்றில் பன்றிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொட்டடியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பை தனது மகனுக்கு அளித்துவிட்டு அருகிலிருக்கும் ஊருக்கு செல்கிறார் ஒருவர். இரவில், அந்தப் பையன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது திடீரென்று ஏற்பட்டத் தீ பன்றிகளின் கொட்டடியை சாம்பலாக்குகிறது. அணைக்க முற்பட்டான் முடியவில்லை. அயலூருக்குச் சென்ற அப்பன் அப்போதுதான் திரும்பினான். பன்றிக் கொட்டடி எரிந்திருப்பதைக் கண்டு கோபமுற்றவன், பாதுகாக்கத் தவறிய மகனை அடித்து விளாசுகிறான்.

தகப்பன் கொடுத்த அடியைத் தாங்க முடியாமல் அழுதுகொண்டே கீழே விழுந்தவனின் கைவிரல் அருகே தீயால் வெந்து கிடந்த பன்றியின் சதைக்குள் பாய்கிறது. சூடு தாங்காத அச்சிறுவன் விரலை வாயில் வைத்து சூப்புகிறான். அவன் அழுகை நின்றது.

தனது தந்தையப் பார்த்துக் கூவினான், “அப்பா பன்றிக் கறி ரொம்ப ருசியாக இருக்கு, நீயும் ருசித்துப் பாரேன்” என்றான். தந்தையும் வெந்த பன்றியின் கறியைச் சுவைக்கிறார். அந்தச் சுவையில் மகிழ்ந்தவர், அச்செய்தியை அக்கம் பக்கத்து கிராமங்களுக்குச் சொல்கிறார். எல்லோரும் கொட்டடியைக் கொளுத்தி பன்றிக் கறியைச் சுவைக்கின்றனர்” என்று கதையை கூறிவிட்டு, “பன்றிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி அல்ல முக்கியம், தீயில் வெந்து நிற்கும் அவற்றின் புலாலுக்கு இருக்கும் சுவையே அற்புதம்” என்று கொட்டடியைக் கொளுத்தி பன்றிக் கறியை சுவைக்கும் நோய்தான் என். ராமின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் வியாபிக்கத் தொடங்கியுள்ளது என்று கூறுகிறார் மாதவி. இந்தக் கதைக்கு இடையே அவரை மாற்றிய அந்தப் பாதை நன்றாக விளக்கப்பட்டுள்ளது.

பன்றிக் கறியை சுவைக்க வீட்டைக் கொளுத்தும் அந்த நோயே, ஈழத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் அரச படைகளால் படுகொலை செய்யப்படும் போது, அதற்குக் காரணமானவனை நியாயவானாக சித்தரித்துப் பேட்டி எடுத்து போடச் செய்ததை புரிந்துகொள்ள முடிகிறது.

திபெத் பிரச்சனையில் உண்மைக்குப் புறம்பாக - சீன அரசு கூறுவதை மட்டுமே - செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் தி இந்து வெளியிட்ட வந்த காலத்தில், திபெத்தின் வரலாற்றை அறிந்தவர்களான சோனியா ஜப்பார், இராமச்சந்திர குகா, முகுல் கேசவன், மது சரின், ஜோதிர்மய சர்மா, திலீப் சிமியோன், டென்சிங் சோனம், சசி தரூர் ஆகியோர் கூட்டாக தி இந்து நாளிதழிற்கு எழுதிய திறந்த (ஆங்கில) கடிதமும், இராமச் சந்திர குகா தி டெலிகிராஃப் நாளிதழில் எழுதிய ‘Big Brother Fascination of N. Ram & Nikhil Chakravartty’ என்ற ஆங்கிலக் கட்டுரையும் இப்புத்தகத்தில் இணைத்து உண்மைக்கு புறம்பான மனப்பான்மை தோலுறுத்திக் காட்டியுள்ளனர்.

‘The challenge of Nandigram’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் வன்செயல்களை திட்டமிட்டு மறைத்து எழுதப்பட்டிருந்ததையும், மேற்கு வங்க அரசிற்குச் சார்பாக ஒருதலைப்பட்சமாக எழுதப்படிருந்ததையும் சுட்டிக்காட்டி 21 பேராசிரியர்கள் எழுதிய ‘Open letter to The Hindu - Credibility at stake’ என்ற கடிதமும் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

“சுதந்திரமான பத்திரிக்கை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்குக் காட்டும் பத்திரிக்கையின் மூலமாகத்தான் நாட்டின் நிலை குறித்தும், நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் நிலை குறித்தும் மக்கள் அறிந்து கொள்ளமுடியும்” என்ற லசந்த விக்கிரமதுங்கவின் வார்த்தைகளே எந்த ஒரு ஊடகத்தின் உண்மையான சமூகப் பொறுப்புணர்வை சோதிக்கும் உரைகல்லாக இருக்கும்.

நூலாக்கம்: மே 17 இயக்கம

நூலைப்பெற: +9197898 16648

தொடர்பிற்கு: [email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்