இதழ்: உயிர் எழுத்து

சனி, 9 பிப்ரவரி 2008 (17:17 IST)
ஆசிரியர்: சுதீர் செந்தில்
நிர்வாக ஆசிரியர்: சிபிச் செல்வன்
ஆசிரியர் குழு:
யூமா வாசுகி
கரிகாலன்
இந்திரா
சுப்ரமணிய பாரதி
நரேந்திரன்

(திருச்சியிலிருந்து வெளிவரும் சிற்றிதழ் உயிர் எழுத்து. சீரிய மொழிபெயர்ப்புகள், சிந்தனைத் தரம் மிக்க கட்டுரைகள், சிறுகதை மற்றும் கவிதைகளுடன் இந்த இதழ் வெளி வருகிறது விலை ரூ.20. இந்த சிற்றிதழிலிருந்து நந்திகிராம் பற்றி ஆசிரியர் சுதீர் செந்தில் எழுதிய தலையங்கத்தை வெப் உலகம் வாசகர்களுக்கு தருகிறோம்)


கடுமையான புயலினால் ஏற்படும் பெரும் வெள்ளம், கடல் சீற்றம், நில நடுக்கம், ஆகியவற்றினால் மக்களின் வாழ் நிலை தற்காலிகமாக பாதிக்கப்படுவதும் அதற்காக நிவாரண நடவடிக்கைகள் நடைபெறுவதும் உண்டு. போர்க்காலங்களில் போர் நடைபெறும் இடத்திலிருந்து மக்கள் அகதிகளாக பாதுகாப்பான நாடுகளுக்கு தஞ்சம் புகுவதும் உண்டு.

ஆனால் சொந்த மண்ணில் பாரம்பரியமாக நிலத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு இருப்பிடங்களிலிருந்து வெளியேற, அகதிகள் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இது நடந்து கொண்டிருப்பது வேறு எங்கோ அல்ல. இடதுசாரிகள் ஆண்டு கொண்டிருக்கும் மேற்குவங்கத்தில்தான்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடிய நந்திகிராம் மக்கள் மீது கடந்த மார்ச் 14ல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்களில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் நந்திகிராமில் அகதிகளாக மறு வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நந்திகிராமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று கூறிய கல்கத்தா உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே இழப்பீட்டுத் தொகை வழங்கவும், இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்தில் அளிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது.

மேற்குவங்க ஆளுனர் கோபால கிருஷ்ண காந்தி, இடதுசாரி அரசை கடுமையாக சாடியுள்ளார். நந்திகிராமில் நடந்த கடும் வன்முறை தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பிற்கு மெற்கு வங்க அரசு முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

நந்திகிராமில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடி வரும் நிலப்பாதுகாப்பு அமைப்பினரிடமிருந்து கையகப்படுத்தப் பட்ட இடத்தை பாதுகாக்க நந்திகிராம், கோகுல் நகர், ராஜாராம் சௌக், கோடம்பாரி உள்ளிட்ட 11 இடங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போராட்டம் நடத்துபவர்களை அடக்க காவல்துறையினரோடு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் காவல்துறை சீருடையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்குகளும் நந்திகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 11 மாதங்களாக நந்திகிராமில் நடந்து வரும் அக்கிரமங்களை மக்களும், இடதுசாரி இயக்கத்தை நடத்திவரும் தொண்டர்களும் பார்த்துக் கொண்டு வருகின்றனர். அசோக் மித்ரா போன்ற மூத்த தலைவர்களும் இச்சம்பவங்களை ஒட்டி இடதுசாரி அரசை கண்டித்துள்ளனர். இச்சம்பவங்கள் மானிலப் பிரச்சனை எனவே, பாராளுமன்றத்தில் விவாதிக்க இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

னந்திகிராம் வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்த மேதா பட்கர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். நந்திகிராம் வன்முறைகளுக்கு எதிராக வரலாற்று அறிஞர் சுமித் சர்க்கார் கூறிய கருத்து இடதுசாரிகளால் கிண்டல் செய்யப்படுகிறது. இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக தொடர்ந்து நந்திகிராம் சம்பவங்களுக்கு வக்காலத்து வாங்கினாலும் மேற்கு வங்க முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யா "நந்திகிராம் விவகாரத்தில் மானில நிர்வாகமும், அரசியலும் தோற்றுவிட்டன என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் மிகப்பெரிய பாடத்தை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம், கலவரக்காரர்களை அடக்க பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என்று நான் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பேச்சுக்களுக்கு தற்போது வருத்தம் தெரிவிக்கிறேன்" எனக் கூறியிருப்பது நல்ல மாற்றமாகும்.

பாரதிய ஜனதாக் கட்சியினர் மோடியின் அரசோடு இடதுசாரிகளை ஒப்பிட்டு பேசுவது போல் நாம் பேச முடியாது. உலக அளவில் கம்யூனிச சித்தாந்தம் அதனை நடைமுறைப்படுத்தும்போது பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் மேற்குவங்க அரசு மத்திய அரசின் கீழ் இயங்கவேண்டிய கட்டாயத்திலும், அணுசக்தி ஒப்பந்தம் போன்ற நாட்டுக்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இடத்திலும் இருக்கிறது. இடதுசாரிகள் தவறு செய்து விட்டால் யாரும் அதை குறை சொல்லக்கூடாது என்பதல்ல. மாறாக பாரம்பரியம் மிக்க மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சுய விமர்சனம் செய்து கொள்வதன் மூலம் தவறுகளை திருத்திக் கொள்வது மரபு. நந்திகிராம் குறித்த செயல்பாடுகளை இடதுசாரித் தொண்டர்களும் மக்களும் மட்டுமல்ல உலகமே கவனித்து வருகிறது என்பதை இடதுசாரித் தலைவர்கள் அறியவேண்டும்.

'நந்திகிராம் சம்பவம் இந்திய கம்யூனிஸ்ட்களின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக இருக்கும்' என்று பாராளுமன்றத்தில் கொக்கரித்த எதிர்க் கட்சித் தலைவர் அத்வானியின் கூற்றைப் பொய்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இடதுசாரித் தலைவர்களுக்கு இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்