உடலுறவு கொள்ளத் தடையால், உலகக் கோப்பை கால்பந்து அணிகள் தோல்வியா?

செல்வன்

சனி, 5 ஜூலை 2014 (12:50 IST)
ற்போது பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஆடும் சில அணிகளின் வீரர்கள் போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் உடலுறவு கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட நேரத்தில் அழகிகள் பின்னால் சுற்றாமல் போட்டியில் கவனம் செலுத்தும் பொருட்டு இந்தத் தடையைச் சில நாடுகளின் கால்பந்துக் கழகங்கள் விதித்துள்ளன.

ஆனால் இப்படி தடை செய்யப்பட்ட அனைத்து நாடுகளும் போட்டியில் தோற்று வெளியேறிவிட்டதால் இத்தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

 
ரஷ்யா, போஸ்னியா, மெக்சிகோ, சிலி அணிகள் இத்தடையை வீரர்களுக்கு விதித்திருந்தன. பெல்ஜியம் முதல் மூன்று வாரங்களுக்கு மட்டுமே இத்தடையை விதித்திருந்தது. ஜூலை 1 அன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அமெரிக்காவைப் பெல்ஜியம் வீழ்த்திய அன்று இந்தத் தடை முடிவுக்கு வந்ததால் பெல்ஜிய அணி வீரர்கள் இந்த வெற்றியை 'முழு குதூகலத்துடன்' கொண்டாடி இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

அதே சமயம் போட்டியிலும் தோற்று, தடையும் நீங்காமல் ஊர் திரும்பும் ரஷ்யா, மெக்சிகோ, சிலி, போஸ்னியா அணி வீரர்கள் தம் நாட்டு கால்பந்துக் கழகச் சங்கத் தலைவர்கள் மேல் கடும் கோபத்துடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

புவி வெப்பமயம் குறித்த சூடான விவாதம்

பூமியில் புவி வெப்பமயத்தின் தாக்கம் நிகழ்கிறதா, இல்லையா எனும் விவாதம், அமெரிக்க விஞ்ஞானிகள், அரசியல்வாதிகளிடையே நடைபெற்று வருகிறது. இதில் கன்சர்வேடிவ் கட்சியினர் புவி வெப்பமயம் நிகழ்வதில்லை என்பதும் லிபரல்கள் புவி வெப்பமயம் நிகழ்கிறது என வாதிடுவதும் வாடிக்கை.
 
இதற்கிடையே 2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் தான் உலக வரலாற்றில் மிகுந்த அதிக அளவில் வெப்பமான மாதம் என்ற புள்ளி விவரம், அமெரிக்க கடல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் கழகத்தால் வெளியிடப்பட்டதும் "புவி வெப்பமயம் நிருபணம் ஆகிவிட்டது" எனச் சொல்லி லிபரல்களும், இன்ன பிற புவி வெப்பமய ஆதரவாளர்களும் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களில் வெளியிட்டார்கள்.
 
ஆனால் இப்போது அமெரிக்கக் கடல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் கழகம், ஜூலை 1936ஆம் ஆன்டுதான் உலக வரலாற்றில் மிகுந்த வெப்பம் மிகுந்த மாதம் என்பதைத் தாமதமாகக் கண்டுபிடித்தது. ஜூலை 1936 மற்றும் ஜூலை 2012 இரு மாதங்களின் வெப்ப நிலையும் தவறாகக் கணக்கிடப்பட்டதால் இக்குழப்பம் நிகழ்ந்திருந்தது. 
அதைச் சரி செய்தபின் ஜூலை 1936 தான் வரலாற்றில் அதிக வெப்பம் நிரம்பிய மாதம் என்பதை அறிந்தும் அதை வெளியே சொல்லவில்லை. தற்செயலாக அந்த வலைத்தளத்துக்குச் சென்ற விஞ்ஞானிகள் சிலர் இதைக் கண்டுபிடித்துக் கேள்வி கேட்டவுடன், வேறு வழியின்றி "ஜூலை 1936 தான் வெப்பம் மிகுந்த மாதம்" என்பதை அமெரிக்க கடல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் கழகம் ஒத்துக்கொண்டது.
 
ஜூலை 1936 தான் அமெரிக்க வரலாற்றில் வெப்பமான மாதம் எனப் பதிவானதால், புவி வெப்பமயம் நிகழ்வதை நிரூபிக்கும் முயற்சியில் ஒன்று தோல்வியில் முடிந்துள்ளது. ஜூலை 2014 மாதமாவது அதிக வெப்பம் உள்ள மாதமாகப் பதிவாகி, புவி வெப்பமயத்தை நிரூபிக்க அனைவரும் சூரிய பகவானை வேண்டிக்கொள்வோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்