விலை மதிப்புடையது தங்கமா? வெள்ளியா?
செவ்வாய், 28 செப்டம்பர் 2010 (17:29 IST)
ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த பெரிய காரியமாக இருந்தாலும், அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே எதையும் செய்வார். அந்த நாட்டு மன்னர் மட்டுமல்லாமல், அண்டை நாட்டு மக்களுக்கும், பொருளாதார நிபுணரின் தனித் திறன் பற்றிய செய்தி பரவியது. அந்த நாட்டு மன்னர்களும் பொருளாதார நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்க ஆரம்பித்தனர்.
ஒரு நாள் பொருளாதார நிபுணரை, அவர் வசிக்கும் ஊரின் தலைவர் அழைத்துப் பேசினார். அவருடன் சில பெரியவர்களும் இருந்தனர். என்ன நீ நாட்டுக்கே பொருளாதார விஷயங்களில் ஆலோசனை வழங்குகிறாய். ஆனால் உன் பையனை கொஞ்சமும் கவனிக்காமல் விட்டுவிட்டாயே. அவனுக்கு உலோகத்தில் அதிக விலை மதிப்பானது தங்கமா? அல்லது வெள்ளியா என்று கூட தெரியவில்லையே.. இந்த லட்சணத்திலா பிள்ளைய வளர்ப்பாய். நாட்டு விஷயங்களை கவனித்தது போதும், வீட்டையும் கொஞ்சம் கவனி என்று கூறி நக்கல் செய்தார். இதற்கு அவருடன் இருந்த பெரியவர்களும் தாளம் போட்டனர்.
வாடிய முகத்துடன் வீட்டிற்கு வந்த நிபுணர், தனது மகனை அழைத்து, மகனே.. உலோகத்தில் விலை மதிப்பானது தங்கமா? வெள்ளியா? என்று கேட்டார். அதற்கு அந்த மகன் தங்கம் என்று பதிலளித்தான். உடனே, தந்தை பிறகு ஏன் இந்த ஊர் பெரியவர்கள் உன்னைப் பற்றி என்னிடம் புகார் கூறினார்கள். உன்னை நான் சரியாக வளர்க்கவில்லை என்றும், தங்கத்திற்கும், வெள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை என்று என்னிடம் நக்கல் செய்தனர் என்று சந்தேகத்துடன் கேட்டார்.
அதற்கு அந்த மகன், தந்தையே, தினமும் நாள் பள்ளிக்குச் செல்லும் போது, உங்களிடம் நக்கலடித்த பெரியவர்கள் என்னை அழைத்து ஒரு கையில் வெள்ளி நாணயங்களையும், ஒரு கையில் தங்க நாணயத்தையும் வைத்துக் கொண்டு இதில் எது பெரியதோ அதை நீ எடுத்துக் கொள் என்று கூறுவார்கள்.
நான் உடனே வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொள்வேன். அவர்கள் கலகலவென்று சிரிப்பார்கள். நான் வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று விடுவேன் என்றான்.
இதைக் கேட்டு அதிர்ந்த நிபுணர், வெள்ளியை விட தங்கம்தான் விலை உயர்ந்தது என்று உனக்குத் தெரிந்திருந்தும் ஏன் தங்க நாணயத்தை எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு அந்த மகன், தந்தையை தனது அறைக்கு அழைத்துச் சென்று ஒரு பெட்டியைத் திறந்து காண்பித்தான். அந்த பெட்டி நிறைய வெள்ளி நாணயங்கள் இருந்தன. அப்போது மகன் சொன்னான், தந்தையே, ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னிடம் தங்க, வெள்ளி நாணயங்களை காண்பிக்கும் போதும் நான் வெள்ளி நாணயங்களையே எடுத்துக் கொள்வேன். அதனால்தான் என்னிடம் இவ்வளவு வெள்ளி நாணயங்கள் இருக்கின்றன. என்றைக்கு நான் தங்க நாணயத்தை தேர்வு செய்கிறேனோ அன்றுடன் இந்த ஆட்டம் நின்று போகும். அவர்களை ஆட்டத்தில் வெற்றி பெற விட்டு விட்டு நான் நிஜத்தில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான்.
இந்த பதிலைக் கேட்டதும் ஆனந்தம் அடைந்தார் தந்தை.
நீதி : சில சமயங்களில் நாம் சில முட்டாள்களுடன் விளையாட வேண்டி வரும் அவர்கள் நம்மை விட வயதில் மூத்தவர்கள் என்பதாலும், நம்மை விட பதவியில் உயர்ந்தவர்கள் என்பதாலும். சில சமயம் நம்மை விடச் சிறியவர்களும் இப்படி இருப்பார்கள். இவர்களுடன் விளையாடி நாம் தோற்றால் அது தோல்வியாகாது. விளையாட்டில் அவரை நாம் வெற்றிபெற வைக்கிறோம். விளையாட்டின் ஒரு பக்கத்தில் அவர்கள் வெற்றி பெறுவது போல் இருந்தாலும், மறு பக்கத்தில் நாம் வெற்றி பெற்றுக் கொண்டிருப்போம். எனவே நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விளையாட்டின் எந்த பக்கத்தில் நீங்கள் வெற்றி பெறப் போகிறீர்கள், எந்த பக்கத்தில் மற்றவரை வெற்றியாளராக்கப் போகிறீர்கள் என்பதை.