குழந்தைகளுக்கு மேக்கப் போடுவது குறித்து நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த விவரம் இங்கே..
குழந்தைகளை வெளியில் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு மேக்கப் போடும் வழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் அது தேவையில்லை.
குழந்தைகளுக்கு தலைக்கு ஊற்றினாலே அவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். அவர்களது முகமும், உடலும் உற்சாகமாகக் காணப்படும். அவர்களுக்கு ஏற்ற வகையில் தலையை வாரிவிட்டு, சாதாரணமாக பொட்டிட்டாலே போதுமானது.
பொதுவாக குழந்தைகளுக்கு அலங்காரங்கள் செய்வது என்பது தேவையற்றது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இளம் வயதில் உள்ள சருமம், இந்த மேக்கப் பொருட்களால் பாழாகிவிடக் கூடும்.
இளம் வயதிலேயே சருமம் பாதிக்கப்பட்டுவிட்டால், பின்னர் நாளடைவில் அவர்களது சருமம் மிக மோசமான நிலையை அடைந்துவிடும்.
முடிந்தவரை மேக்கப் போடுவதை தவிர்ப்பது நல்லது. அப்படியே அவர்கள் மேக்கப் போடுவதை அதிகம் விரும்பினால், கண்ணுக்கு நல்லத் தரமான கண் மை இடுங்கள். விலை மதிப்புள்ள, நல்லத் தரமான லிப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்துங்கள்.
webdunia photo
WD
பலரும், விலை மலிவான தரமற்ற லிப்ஸ்டிக்குகளை வாங்கி வந்து குழந்தைகளுக்கும் அதனைப் போட்டு விடுவார்கள். இது மிகவும் தவறு. அப்படி போடுபவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியாமல் போய்விடுகிறது. அதாவது மற்ற மேக்கப் பொருட்களை விட, லிப்ஸ்டிக் வாய்க்குள் போகும் ஆபத்து இருக்கிறது. எனவே தரமான லிப்ஸ்டிக்குகளை மட்டும் பயன்படுத்துவது நல்லது.
குழந்தைகளுக்கு லிப்ஸ்டிக் போடுவதை தவிர்ப்பது நல்லது. அப்படியே போட வேண்டும் என்றாலும், தரமான லிப்ஸ்டிக்குகளை லேசாகப் போட்டு அதன் மேல் நல்ல லிப் கிளாஸைப் போட்டால் போதும். அவர்கள் பார்க்கும் போது கண்ணாடியில் அழகாகத் தெரிவதுதான் முக்கியம். எனவே குழந்தைகளுக்கு மிகக் குறைந்த அளவில் மேக்கப் போடுவது நல்லது.
குழந்தைகளுக்கான பேஷியல், ப்ளீச்சிங் என ஏதாவது உண்டா?
நிச்சயமாக இல்லை. அப்படி செய்யவும் கூடாது. தற்போதெல்லாம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளே எல்லா மேக்கப்பும் செய்து கொள்கிறார்கள். இது மிகவும் தவறு.
WD
பொதுவாக பள்ளிப் பருவத்தில் எந்த அலங்காரமும் தேவையற்றது. மிகவும் அடர்த்தியான புருவம் கொண்ட பெண்கள் அதுவும் பள்ளி மேல் படிப்பைப் படிக்கும் பெண்கள் வேண்டுமானால் புருவத்தை வடிவம் செய்து கொள்ளலாம். மற்றபடி பள்ளிக்குச் செல்லும் பெண்கள் வேறு எந்த அலங்காரமும் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
பிறகு கல்லூரிக்குச் சென்ற பிறகு அவர்களது விருப்பப்படி, அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொள்ளலாம். அதில் தவறில்லை.
தற்போதெல்லாம், சில பெண்களுக்கு பூப்பெய்தியதுமே, பேஷியல், ப்ளீச்சிங் செய்து மேக்கப் போடுகிறார்கள். ஒரு முறை பெண் ஒருவள் தன்னை அழகாகப் பார்த்துவிட்டால் பிறகு அதையே விரும்புவாள். எனவே, தொடர்ந்து அதைச் செய்வார்கள். பணமிருப்பவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து செய்து கொள்கிறார்கள்.
ஆனால், இது மிகவும் தவறான வழியாகும். இளம் வயதில் நமது சருமம் இதுபோன்ற அழகுச் சாதனங்களால் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டால் அதன்பிறகு சருமத்தை பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விடும்.
எனவே, பள்ளிப் பருவம் வரையிலாவது குழந்தைகளுக்கு மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும் என்பது எனது ஆலோசனையாகும்.
குழந்தைகள் இப்போது அழகாக இருக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதீர்கள். அவர்களது எதிர்காலமும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். எனவே, தற்போது குறைவான மேக்கப்பைப் போடுவது நல்லது.