கேள்விகளை புரிந்து கொண்டு, நியாயமாக பதில் அளிக்கும் தன்மை இருந்தால் போதும். குழந்தைகள் சாட்சியத்தையும் ஏற்று தண்டனை வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
கர்நாடகத்தில் சாந்தப்பாவிற்கு, தனது மனைவி அன்னப்பூர்ணாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் 1994 டிசம்பர் 31ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்த்து மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதனைப் பார்த்த சாந்தப்பாவின் 9 வயது மகனின் சாட்சியத்தை அடிப்படையாக வைத்து சாந்தப்பா மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து சாந்தப்பா செய்த மேல் முறையிட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சிறுவனின் சாட்சியம் நம்பும்படியாக இல்லை என்று கூறி மூவரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் அரிஜித் பசாயத், அசோக் குமார் கங்குலி ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து, கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இது குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஆதாரங்கள் சட்டம் 118வது பிரிவின்படி கேள்விகளை புரிந்து கொண்டு பதில் அளிக்கும் தன்மை கொண்ட யாரும் சாட்சியம் அளிக்கலாம். வயது முதிர்ச்சி, தீராத நோய், மனநிலை பாதிப்பு மற்றும் பிற காரணங்களால் கேள்விகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீதிமன்றங்கள் கருதினால் மட்டுமே அத்தகைய நபர்கள் சாட்சியம் அளிக்க இயலாது. குழந்தையாக இருந்தாலும் கேள்விகளை புரிந்து கொண்டு பதில் அளிக்கும் ஞானம் இருந்தால் சாட்சியம் அளிக்க உரிமை உண்டு. இந்த வழக்கில் சிறுவன் சுரேஷிடம் பூர்வாங்க கேள்விகளை கேட்டு அவனது தன்மையை அறிந்து கொண்ட பிறகே சாட்சியம் அளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.