திங்கள், 15 நவம்பர் 2010 (13:08 IST)
சி.என்.என். ஹீரோ ஆப் தி இயர் என்ற விருதிற்கு இந்தியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கிருஷ்ணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்ட இந்த விருது, ஒரு சமையல் நிபுணருக்கு கிடைத்திருப்பது எந்த வகையிலும் குறைந்ததில்லை. ஆம், மதுரையில் வாழ்ந்து வரும் கிருஷ்ணன், சுவிட்சர்லாந்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தலைமை சமையல் நிபுணராக இருந்தவர். ஆண்டுக்கு ரூ.18 லட்சம் சம்பளம் பெற்ற இவரது வாழ்க்கை வெறும் அடுப்படியிலேயே சென்றிருக்கும், ஒரு காட்சியை இவர் காணாமல் இருந்திருந்தால். ஒரு நாள் சாலை ஓரத்தில், மன நோயாளி ஒருவர் தனது கழிவை தானே உண்பதைக் கண்ட கிருஷ்ணன், மனம் வெதுப்பினார். வெறும் சம்பளத்திற்காக இங்கு நாம் சமைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மை இறைவன் இதற்காக படைக்கவில்லை, நமக்காக வேறு ஏதோ ஒரு வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, வேலையை விட்டுவிட்டு மதுரை திரும்பினார். இதுபற்றி அவர் மனம் திறந்து கூறுகையில், மதுரையில் மனநோயாளிகள், கைவிடப்பட்டு தெருவில் அலையும் பெண்கள் ஆகியோருக்கு 3 வேளை உணவு அளிக்கும் பணியை செய்யத் துவங்கினேன். ஆரம்பத்தில் தனியாகத்தான் இந்த பணியைச் செய்யத் துவங்கினேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து சமையல் செய்யத் துவங்கிவிடுவேன், காய்கறிகள், சத்தான தானியங்களைக் கொண்டு நல்ல உணவைத் தயாரித்து அதனை சிறு பொட்டலங்களாகக் கட்டுவேன். இப்படி ஒரு நாளைக்கு 3 வேளையும், மதுரையில் உள்ள சுமார் 400 பேருக்கு உணவு கொடுக்கத் துவங்கினேன். 2002ஆம் ஆண்டில் இருந்து கடநத் 8 ஆண்டுகளாக இப்பணியை நான் செய்து வருகிறேன். தற்போது என்னுடன் ஒரு சமையல்காரர், உதவியாளர், வாகன ஓட்டுநர் என பலரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதில்லாமல், மேலும் சில தன்னார்வ தொண்டர்கள், சமைத்த உணவை பல்வேறு பகுதிகளில் வாழும் ஆதரவற்ற பெண்கள், மன நோயாளிகளுக்கு எடுத்துச் சென்று கொடுக்கும் பணியை செய்து வருகின்றனர். இதற்காக அக்ஷயா என்ற அறக்கட்டளையை நிறுவி, தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறேன். ஒரு நாள் கூட நான் உணவு அளிக்காமல் இருந்ததில்லை. ஒரு தாயைப் போல நான் இந்தப் பணியை செய்து வருகிறேன். தற்போது நாள் ஒன்றுக்கு 800 பேருக்கு உணவளிக்கிறோம். இதற்காக ஒரு நாளைக்கு ரூ.15000 செலவாகிறது. அக்சயா அறக்கட்டளைக்கு தனியார் நன்கொடைகள் கிடைக்கின்றன என்று கூறுகிறார். சுமார் 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிடும் சிஎன்என் ஹீரோ ஆப் தி இயர் விருது முறைப்படி வரும் 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அறிவிக்கப்படும். இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. இந்த விருதின் மூலமாக வரும் பணத்தைக் கொண்டு, மதுரையில், மன நோயாளிகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை முடிப்பேன் என்று மகிழ்ச்சியாகக் கூறுகிறார். மேலும், அந்த அமைப்பின் மூலம் மதுரையில் சுமார் 3000 சதுர அடி பரப்பளவில் 8 மாடிகளைக் கொண்ட காப்பகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 400 முதல் 500 பேர் வரை தங்கவைக்கலாம். இதில் மன நோயாளிகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் தங்கும் இடம் அளிக்கப்படும். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றவர்களும் இங்கு தங்கள் கடைசிக் காலம் வரை தங்கலாம். நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களுக்கு ஏதேனும் தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும். இந்த அறக்கட்டளையில் தங்கியிருந்து, இறக்கும் நபர்களுக்கும், கெளரவமான இறுதிச் சடங்கினை நடத்துவோம். 2002ஆம் ஆண்டில் இருந்து ஒரு நாள், ஒரு வேளை உணவைக் கூட நான் செய்யாமல் இருந்ததில்லை, குழந்தைக்கு பால் கொடுப்பதை ஒரு தாய் எவ்வளவு பொறுப்போடு செய்வாளோ அதே பொறுப்புணர்ச்சியோடுதான் நான் இதைச் செய்கிறேன். தன் மலத்தையே தான் சாப்பிட்ட மன நோயாளியின் நினைவுதான் இந்தச் செயலை நான் செய்வதற்கான ஒரு உந்து சக்தியாக உள்ளது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ, அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறுகிறார் கிருஷ்ணன்.
செயலியில் பார்க்க x