திங்கள், 22 மார்ச் 2010 (12:17 IST)
கோடை காலம் ஆரம்பிக்கும் போதே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்க, அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.
முந்தைய காலத்தில் கோடைக் காலம் துவங்கிவிட்டால் வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். வழியில் செல்வோர் அந்த நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்வார்கள் என்ற நல்ல நோக்கத்தோடு. ஆனால் அதுபோனற்தொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா? காண முடியும், வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால் அவை நீர் நிரம்பி அல்ல, நீர் நிரப்ப, எப்போதாவது வரும் குழாய் நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள் அவை. முதலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன தெரியுமா? நீர் ஆதாரங்களை காக்க வேண்டும், தற்போது எத்தனை குளங்கள் இருந்த இடத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன, ஏரிகள் இருந்த இடங்கள் எத்தனை காலனிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே தேங்கி நிற்க வேண்டிய நீர் எங்கே சென்று நிற்கும்? நினைத்துப் பார்த்ததா மனித சமூகம்? நீர் இருந்த இடத்தை காலி செய்து விட்டு அங்கே நாம் குடிபோனோம். தற்போது குடிநீர் இல்லை என்று அலைந்து கொண்டிருப்பதும் நாம்தான். 70
விழுக்காடு பரப்பளவு நீர் இருந்தாலும் அதில் 97.5 விழுக்காடு கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதும் 2.5 விழுக்காடு அளவிற்குத்தான் நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனித்தரையாகவும் மாறிப் போயிருக்கிறது எஞ்சியுள்ள 0.26 விழுக்காடு நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான், ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டியதும், நீர் ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் கடமையாகிறது. இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக் கள், குடிநீருக்காக ஒருவரை ஒருவர் கொன்றுப் போடும் நிலைதான் ஏற்படும். எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.
செயலியில் பார்க்க x