மரணம் அடைய விரும்பும் சிறுமி

தனக்குள்ள நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் உயிர் வாழ்வதை விட, இல்லத்தில் நிம்மதியாக தனது மீதிக் காலத்தைக் கழித்துவிட்டு மரணமடைய விரும்புகிறார் ஒரு சிறுமி.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுமி ஹன்னா ஜோன்ஸூக்கு ரத்த புற்றுநோயும் (லுகேமியா), இருதயக் கோளாறும் உள்ளது.

அவருடைய இருதயம் 10 விழுக்காடு மட்டுமே செயல்படுகிறது. அதாவது 10 விழுக்காடு அளவிற்கு மட்டுமே ரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு அனுப்புகிறது.

இதன் காரணமாக அவர் கடந்த 8 ஆண்டுகளாக மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுவிட்டன.

தற்போது அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். 6 மாதங்களுக்குள் மாற்று இருதயம் பொருத்தப்படாவிட்டால் அவர் இறந்து விடுவார் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஆனாலும், தற்போது மாற்று இருதயம் பொருத்தப்பட்டாலும், மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை இருதய மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் தனது உயிர் மீதான ஆசையைக் கைவிட்ட சிறுமி ஹன்னா, அறுவை சிகிச்சைகள் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆனால் அறுவை சிகிச்சை செய்யாமல் இருப்பது தற்கொலைக்கு சமம் என்று கூறி, மருத்துவமனை அதிகாரிகள் நீதிமன்றத்தில், ஹன்னா சிகிச்சை பெற வேண்டும் என்று வற்புறுத்தி வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கின் விசாரணையிலும், ஹன்னா தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றே தீர்ப்பானது.

இந்த நிலையில், அந்த சிறுமி, மருத்துவமனை அதிகாரிகளைச் சந்தித்து தனது மனநிலையை வெளிப்படுத்தினால். சிகிச்சை பெற்றுக் கொண்டே மருத்துவமனையில் உயிர் வாழ்வதை விட, தனது இல்லத்தில் நிம்மதியாக தனது மீதி நாட்களைக் கழிக்கவே அவர் விரும்புவதாகவும், மேலும் எந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் தான் விரும்பவில்லை என்றும் அதிகாரிகளுக்கு அவர் எடுத்துக் கூறினார்.

அவரது வாழ்க்கையின் வலியை அவரது வார்த்தைகளில் உணர்ந்த மருத்துவ அதிகாரிகளும், அவரது விருப்பத்திற்கு இணங்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

தற்போது ஹன்னா தனது இல்லத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக தனது இல்லத்திற்குக் கிளம்பி விட்டார்,

அவரது மீதி நாட்கள் இனிமையாகவும், அவரது இறுதிப் பயணம் அமைதியாகவும் அமைய பிரார்த்திப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்