கோடை கால சிறப்பு நிகழ்ச்சியாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சென்னை தீவுத்திடலில் செயற்கை பனி மலை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆண்டுதோறும் தனியாருடன் இணைந்து, கோடை காலத்தில் தீவுத் திடலில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டுகளை அங்கு அறிமுகம் செய்கின்றனர். தற்போது தீவுத் திடலில் ரோகினி நிறுவனங்கள் குழுமத்துடன் இணைந்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம், குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் சில விளையாட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
அதன் ஒரு நடவடிக்கையாக செயற்கை பனி மலையை உருவாக்கி உள்ளனர். செயற்கை பனி மலைக்குள் சென்றதும் வண்ண விளக்குகள் ஒளிர்ந்தபடி இருக்கும் பனி உலகத்தைக் காணலாம். 2 ஆயிரம் சதுர அடிப்பரப்பில் பனி மலை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே சென்றதும் ஏதோ குளிர்பதனப் பெட்டிக்குள் வந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. மேலிருக்கும் ஜன்னல்களில் இருந்து பனித் துகள்கள் விழுகின்றன.
சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஆடிப்பாடுவதுடன், ஒருவர் மேல் ஒருவர் பனித் துகள்களை அள்ளி வீசி விளையாடுகின்றனர்.
பனிமலை பிற்பகல் 1.30 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். பனிமலையில் விளையாடுவதற்கு கால நேரம் எதுவும் இல்லை. உங்கள் இஷ்டம் போல விளையாடலாம். பெரியயவர்களுக்கு ரூ.95ம், சிறியவர்களுக்கு (4 அடி உயரத்துக்கு குறைவானவர்கள்) ரூ.65ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு விளையாட்டு பங்கி ஜம்ப் ஆகும். இந்த விளையாட்டும் வெகுவாகக் குழந்தைகளைக் கவர்கிறது. 2 பக்கமும் இருக்கும் தூணோடு ரப்பர் கயிறுகள் மூலம் இடுப்பு மற்றும் தொடைகளை கட்டிவிடுகின்றனர். பின்னர் அந்தக் கயிறை மோட்டார் மூலம் இயக்கும் போது, 30 அடிக்கும் மேலாக தூக்கிச் செல்கிறது. கீழே வந்ததும் மீண்டும் உயரே தூக்குகிறது. இப்படி 3 நிமிடங்கள் மேலும் கீழுமாக குதிக்க வைக்கிறது. இதற்கு கட்டணம் ரூ.50.
பெயின்ட் பால் விளையாட்டை குறைந்தபட்சம் 2 பேராவது விளையாட வேண்டும். இதில் கியாஸ் மூலம் இயங்கும் துப்பாக்கி தரப்படும். அதனுள் பெயின்ட் அடைக்கப்பட்ட கோலிகுண்டு போன்ற சிறிய பந்துகளைப் போட வேண்டும். ஆங்காங்கு வைக்கப்பட்டு இருக்கும் மணல் மூட்டைகள், டயர்கள், பேரல் உருளைகளுக்கும் பின்பு ஒளிந்து கொண்டு இருப்பவர்களை குறிபார்த்துச் சுட வேண்டும்.
உடலில் பட்டதும் இந்த குண்டு உடைந்து பெயின்ட் கரை பிடித்துவிடும். எனவே இதற்காக தனி உடை தருகிறார்கள். முகத்தில் பட்டுவிடாதபடி முகக் கவசமும் தரப்படுகிறது. 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. 10 பந்துகள் ரூ.125, 20 பந்துகள் ரூ.200, 50 பந்துகள் ரூ.450 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவை தவிர குழந்தைகளுக்கான மேலும் பல விளையாட்டுகள் உள்ளன. உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தேர்தல் நடந்ததால் இந்த விளையாட்டுகளை கோடை விடுமுறை ஆரம்பத்தில் தொடங்க முடியவில்லை என்று ரோகினி நிறுவனங்கள் குழும உரிமையாளர் வினோஜ் கூறினார்.
விடுமுறை முடிய இன்னும் ஒரு நாட்கள் உள்ளனவே. எனவே குழந்தைகளா ஒரு கை பார்த்து விடலாம். வாருங்கள் தீவுத் திடலுக்கு.. விளையாடி மகிழலாம்.