நேற்று இரவு வானத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு அபூர்வ காட்சி தென்பட்டிருக்கும். அதாவது நிலாவைப் பார்க்க முடியாமல் கண் கூசும் அளவிற்கு நிலாவின் அருகில் வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்கள் தோன்றியதுதான் அது.
நிலவின் ஒருபகுதி, மனித முகத்தின் வாய் போலவும், அதற்கு மேலே தோன்றிய இரு கிரகங்களும் கண்கள் போலவும் இருந்தன.
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை உள்கோள்கள் என்றும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன், புளூட்டோ ஆகியவை வெளிக்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
நேற்று இரவு சந்திரனின் இடது புறம் வெள்ளி (வீனஸ்) கோள் நல்ல பிரகாசமான ஒளியுடன் காணப்பட்டது. இது சூரியன் மறைந்த பிறகு நிலவில் இருந்து மேல் புறத்தில் தெரியும். நிலவின் உயரே வலது புறத்தில் தோன்றியது வியாழன் கோள் ஆகும். இது வெள்ளியை விட பிரகாசம் குறைவாக இருந்தது.
வானத்தில் தோன்றிய இந்த அதிசய காட்சி பற்றி சென்னையில் உள்ள பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் அய்யம் பெருமாளிடம் கேட்டதற்கு, வானத்தில் தோன்றிய இந்த காட்சி அதிசயம் அல்ல. நிலவும் இரு கோள்களான வெள்ளியும் வியாழனும்தான்.
சந்திரன் பூமியை சுற்ற 291/2 நாட்கள் ஆகும். வியாழன் சூரியனை சுற்றி வர 12 வருடம் ஆகும். வெள்ளி சூரியனை சுற்றி வர 224 நாட்கள் ஆகும்.
இவை இப்படி அருகருகே வருவது வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும். இக்காட்சி இந்த வருடம் கடந்த சில நாட்களாகவே தெரிகிறது. ஆனால் வானம் மேக மூட்டமாக இருந்ததால் நம்மால் சரியாக பார்க்க முடியாமல் இருந்தது. நேற்று வானம் தெளிவாக இருந்ததால் இந்த காட்சி கண்களுக்கு தெரிகிறது என்றார்.