தேனீக்களைப் பற்றி அறிவோம்
புதன், 10 நவம்பர் 2010 (14:47 IST)
பூவின் மகரந்தத்தில் இருந்து தேனை உறிஞ்சி அவற்றை தேன் கூடுகளில் சேகரித்து வைக்கும் அரிய செயலை செய்யும் தேனீக்களைப் பற்றிய ஒரு கட்டுரை இது.
பொதுவாக உலகில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட இனம் பூச்சி இனமாகும். இந்த பூச்சி இனங்களில் மனிதனுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் இனங்களே அதிகம். ஆனால் மனிதனுக்கு பயன்படும் தேனை உற்பத்தி செய்து, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கும் தேனை அளிக்கும் தேனீக்கள், ஈ வகையைச் சேர்ந்தவையாகும்.
தேனீக்கள் ஆப்ரிக்காவில் தோன்றியுள்ளன. அப்படியே ஒவ்வொரு கண்டமாகப் பரவி தற்போது பூமியில் அன்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்து வருகின்றன.
தேனீக்களில் ராணித் தேனி, ஆண் தேனி, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அமைப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று தேனீக்களின் கூட்டணியால் உருவாவதுதான் தேன் கூடாகும். பொதுவாக ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என்ற வேற்றுமையை உணர்த்தும் உடல் உறுப்பு வித்தியாசம் மட்டுமே இருக்கும். ஆனால், தேனீக்களில் மட்டும் மூன்று வகையான உடல் அமைப்புகள் உள்ளன.
ஒரு தேன் கூடு என்றால் ராணித் தேனீ ஒன்றே ஒன்றுதான் இருக்கும். ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கிலும், வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக்கணக்கிலும் இருக்கும். இராணித் தேனீ மற்ற இரு வகை தேனீக்களை விட அளவில் பெரியதாக இருக்கும். கூடுகளில் இருக்கும் மற்ற எல்லா தேனீக்களுக்கும் இதுதான் தாயாகும்.
ராணித் தேனிக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் உள்ளன. இவை மீண்டும் மீண்டும் வளரும் தன்மை கொண்டவை. ஆனால் ஆண் தேனீக்களுக்கு கொடுக்குகள் இல்லை. அதே சமயம் வேலைக்காரத் தேனீக்களுக்கு விழுந்துவிட்டால் மீண்டும் முளைக்காத கொடுக்குகள் உள்ளன.
ஆண் தேனீக்கள் இராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் உயிரிழந்துவிடும். இராணித் தேனீ முட்டையிலிருந்து முழு வளர்ச்சி அடைந்து பிறக்க 16 நாட்கள் ஆகின்றன. ஆனால், ஆண் தேனீக்கள் பிறக்க 24 நாட்களும், வேலைக்காரத் தேனீக்கள் பிறக்க 21 நாட்களும் ஆகின்றன.
வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களிலிருந்து மகரந்தத் தூளைச் சேகரித்து கொண்டு வர அவற்றின் பின் காலில் மகரந்தக் கூடை அமைந்துள்ளது. அதேப் போல, பூக்களின் குளுக்கோஸைத் தேனாக மாற்றும் தேன் பையும், தேன் கூடு கட்டுவதற்கான சுரப்பியும் வேலைக்காரத் தேனீக்களுக்கு மட்டுமே அமைந்துள்ளது. இது எதும் மற்ற தேனீக்களுக்கு இல்லை.
இராணித் தேனீ கூட்டிலிருந்து வெளியே வந்தவுடன் ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கிறது. அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களை ராணித் தேனி பெற்று கொள்கிறது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளை இடுகிறது ராணித் தேனீ.
ராணித் தேனீ என்பது பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறது, அதாவது ஒரு ர ாணித் தேனீக்கு வயதாகிவிட்டதும், உடனடியாக ராணித் தேனீ உருவாக்கும் பணி நடைபெறுகிறது. அதற்கான அறையை தேர்ந்தெடுத்து கடைசியாக இட்ட சில முட்டைகளை அதில் வைத்து இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களுக்கு தொடர்ந்து ராயல் ஜெல்லி எனப்படும் உயர் தர ஊட்டச்சத்து திரவம் தரப்படுகின்றன. இந்த திரவம் பெற்ற ஒரு தேனீ மட்டும் நல்ல வளர்ச்சி பெற்று இராணித் தேனீயாக உருமாறுகிறது. இந்த திரவம் என்பது வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் சுரப்பியாகும்.
ஒரு ராணித் தேனீ வந்ததும், அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ராணித் தேனீக்களை முதலில் வரும் தேனீ கொன்று அழித்து விடுகிறது. மேலும், பழைய ராணித் தேனீயையும் இது அழித்துவிட்டு புதிய சாம்ராஜ்யத்தைத் துவக்குகிறது.
தேன் கூட்டில் மிகவும் கொடுமையான வாழ்க்கை வாழ்வது என்றால் அது ஆண் தேனீதான். ஆண் தேனீக்கு கொடுக்கும் இல்லை, தேன் சேகரிக்கும் உறுப்பும் இல்லை. இவை வெறுமனே ராணித் தேனியுடன் உறவு கொண்டு இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. அதுவும் உறவு கொண்டதும் ஆண் தேனீ இறந்துவிடுகிறது. இது தேன் கூட்டில் சோம்பித் திரியும் தேனீயாகவே வாழ்கிறது.
நமக்கு பயன்படும் தேனீயை சேகரிக்கும் பணியை செய்வது வேலைக்காரத் தேனீக்கள்தான். தேன் சேகரிப்பது மட்டுமல்லாமல், கூடு கட்டும் பணியையும் இவைதான் செய்கின்றன. மலரில் இருந்து தேனீக்களால் உறிஞ்சி எடுக்கப்படும் மது, அவற்றின் வயிற்றில் இருந்து வரும் சுரப்பியுடன் சேர்ந்து உருவாவதுதான் தேன். சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும்.
தேன் கூட்டின் வெப்பநிலையை மாற்றி அமைக்கும் தன்மையும், தேன் கூட்டை தாக்க வரும் எதிரிகளை கொட்டி, பாதுகாக்கும் பணியையும் இந்த வேலைக்காரத் தேனீக்களே செய்கின்றன. ஒரு தேனீ ஒருவரைக் கொட்டினால், அந்த தேனீயின் விஷப் பையில் இருக்கும் விஷம், தேனீயின் உடல் முழுவதும் பரவி தேனீயும் உயிரிழக்கிறது.
பொதுவாக பலரும் தேன்கூட்டினை பார்த்திருப்பீர்கள். அது அறுகோண வடிவில் அமைந்திருக்கும். சிறந்த பொறியாளர்களைப் போல செயல்பட்டு தேனீக்கள் செயல்பட்டு இந்த தேன் கூட்டினை கட்டுகின்றன.
தேனீக்களின் வாழ்க்கையைப் பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்திருக்குமே..