சாதனைகளைப் படைப்பதற்கான வழி
வியாழன், 29 ஏப்ரல் 2010 (12:07 IST)
குழந்தைகளா ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தாம் கொண்ட லட்சியத்தை அடைய அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து, அதில் தோல்வி கண்டாலும் துவண்டுவிடக் கூடாது. முயற்சியேச் செய்யாமல் இருப்பதை விட, முயற்சி செய்து தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என்பதை உணருங்கள்.
வாழ்க்கையில் அதுபோன்று ஒரு லட்சியத்தைக் கொண்டு வாழ வேண்டும் என சுவாமி விவேகானந்தர் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதாவது, வாழ்க்கையில் உயரிய லட்சியங்கைளக் கொள்ள வேண்டும். அதை அடைவதற்கு எப்போதும் சிந்தனை செய்ய வேண்டும். கனவிலும், செயலிலும், அதுவே உயிர்ப்புடன் இருக்க வேண்டும். உனது மூளை, தசை, நரம்பு, ஒவ்வொன்றும், அதை நிறைவேற்றும் வேகத்துடன் செயல்பட வேண்டும்.
உன்னுடைய நோக்கம் அது மட்டுமே மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு.
ஒரு முகமாக குவிந்த செயல் முனைப்பு, சக்தியையெல்லாம் ஒடுக்கி ஒரு சேர சேர்க்கும். ஆற்றல் ஆகியவைதான் லட்சியங்களை அடைவதற்கு அடிப்படையாகும். கடவுள், மிருகங்களைக் கூட மனிதனை போலவே படைத்திருக்கிறார். ஆனால் மிருகங்களுக்கு இந்த சிந்தனை தன்மையும், செயல் வேகமும் கிடையாது.
வெறும் வலிமை மட்டுமே பெற்றுள்ளதுதான் விலங்கினம்.
அதனால்தான் மிகவும் வலிமை வாய்ந்த மிருகத்தையும் கூட மனிதன் அடக்கியாள முடிகிறது. ஒரு சிறந்த மனிதனையும், சாதாரண மனிதனையும் பிரிப்பது கூட சிந்தனை ஆற்றல்தான். மேலும் அவர்களுடைய சிந்தனையில் இருந்த கருத்தூன்றும் சக்திதான். இந்த சக்தியை வீணாக்கக் கூடாது. இந்த சக்தியை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு தியானத்தில் ஈடுபடுங்கள்.
தியானம் செய்வதன் மூலம் நீங்கள் சிந்திப்பதை செயல்படுத்தும் துணிவும் மனவலிமையும் உங்களுக்கு கிடைக்கும். இது உங்கள் லட்சியங்களில் வெற்றி பெற உதவும் என்று இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.