குழந்தைகளின் திறமையை அவர்களுக்கு உணர்த்துங்கள்

வியாழன், 17 ஜனவரி 2008 (10:15 IST)
உங்கள் குழந்தை அங்கே இங்கே ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருக்கிறதா... அதை அப்படியே விடுங்கள். குழந்தையின் ஓட்டத்திற்கு தடை போடாதீர்கள். அவர்களின் ஓட்டப்பாதையை பாதுகாப்பானதாக மாற்றிக் கொடுங்கள்.

அவர்கள் யார்? அவர்களால் என்னென்ன முடியும்? எது முடியாது? எது தெரியவே தெரியாது என்பதை அவர்களுக்கு உணர்த்துவது அவசியம்.

அவர்கள் அறிந்த விஷயத்தைப் பற்றிய முழுமையான விவரத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் அதிகமோ அது இசையோ அல்லது படிப்பாகவோ மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. சைக்கிள் ஓட்டுவது, கிரிக்கெட் போன்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் அவனது ஆர்வத்தை குறைக்க முயற்சிக்க வேண்டாம்.

முழுவதுமாக அவனை அதில் உள்ள நுணுக்கங்களை அறிந்து அதில் சிறந்தவனாக மாற்ற உதவுங்கள். அவனது பாதையை தீர்மானிப்பவராக அல்லாமல் பாதையை சீரமைப்பவராகவே பெற்றோர் இருக்க வேண்டும். அதுவே தலைசிறந்த பெற்றோருக்கான குணம்.

மற்றவர்களுடன் பழக விடுங்கள். ஏனெனில் அந்த குழந்தை வளர்ந்து அங்குதான் வாழ வேண்டியிருக்கும். அப்போது அது ஏதோ புதிய உலகத்தைப் பார்ப்பது போல் இருக்கக் கூடாது.

அவர்களை எளிமையாக வாழ விடுங்கள். எந்த திணிப்பையும் அவர்கள் மீது காட்ட வேண்டாம்.

குழந்தைகள் குழந்தைகளாகவே வளர்ந்து வாழட்டும். புதிய சமுதாயம் இனிமையாக மலரட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்