ஊனம் ஒரு தடையல்ல

புதன், 19 ஆகஸ்ட் 2009 (15:26 IST)
சாதிப்பதற்கு வயதோ, ஊனமோ எ‌ப்போது‌ம் ஒரு தடையாக இரு‌க்கவே இரு‌க்காது. இதனை ‌நிரூ‌பி‌த்து‌ள்ளா‌ர் கேரள மா‌நில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ஜா‌பி மே‌த்யூ.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த மேத்யூ, ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தவர். ஒருவித நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு இடுப்பு மற்றும் கால் பகுதி செயலிழந்தது. இவரது மொ‌த்த உயரமே மூ‌ன்றரை அடிதா‌ன். வீல் சே‌ர் மூலமாக‌த்தா‌ன் இவ‌ர் நட‌க்‌கிறா‌ர்.

வா‌ழ்‌க்கை‌யி‌ல் பல சோதனைகளை‌த் தா‌ண்டி வ‌ந்த இவ‌ர், சாதனைக‌ள் படை‌க்க முடிவெடு‌த்தா‌ர். ச‌ட்ட‌ம் ப‌யி‌ன்றா‌ர், ‌விளையா‌ட்டி‌ன் ‌மீது ஆ‌ர்வ‌ம் கொ‌ண்ட இவ‌ர் கை பல‌த்தை ‌நிரூ‌பி‌க்கு‌ம் போ‌‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்று பல பத‌க்க‌ங்களை வெ‌ன்றா‌ர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற கை பலத்தை நிரூபிக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.
அமெரிக்கா, ரஷ்யா, எகிப்து மற்றும் ஸ்பெயின் வீரர்களை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். 60 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இவரது அடுத்த இலக்கு, வரு‌ம் அக்டோபர் மாதம் எகிப்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான கை பலத்தை நிரூபிக்கும் போட்டியில் உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பதுதான். இதுமட்டும் அல்ல, 2012ல் லண்டனில் நடைபெறும் உடல் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கப் போவதாகக் கூறும் இவர், அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

எனது வாழ்க்கையின் வில்லன் ஊனம் அல்ல, வறுமைதான். அதனால் சவாலை எதிர்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவேதான், கை பல‌த்தை ‌நிரூ‌பி‌க்கு‌ம் போட்டியை தேர்ந்தெடுத்தேன். மேலும் நாட்டின் முதல் வீல்சேர் வாள் சண்டை வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அரேபியன் கடலில் 5 மைல் தூரம் நீந்தி உள்ளேனஎன்‌கிறா‌ர் ஜாபி உ‌ற்சாகமாக.

வெப்துனியாவைப் படிக்கவும்