இஸ்லாம் கூறும் நட்புறவு
செவ்வாய், 16 மார்ச் 2010 (12:41 IST)
பொதுவாக காதலை விடவும், உறவுகளை விடவும் நட்பை பெரிதாக சொல்ல பலக் காரணங்கள் உண்டு. தாயிடமும், தந்தையிடமும், கட்டிய மனைவியிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நாம் நண்பரிடம் பகிர்ந்து கொள்வோம்.
உன் நண்பனைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்ற பொன்மொழியில் இருந்தே நட்பின் வலிமையை நாம் உணருகிறோம்.
பலரும் தங்களது வாழ்க்கையில் நல்ல நட்பு கிடைக்காததால் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் வாழ்ந்து வருவதை கண்கூடாக காண்கிறோம். அதேப்போல, தீய நட்பினால் வாழ்க்கையை இழந்து பரிதவிக்கும் நிலையும் உண்டு.
ஆனால் நட்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் நிறைய வழிகாட்டுகிறது. நண்பர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் அது அழகாகக் கற்றுத் தந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) தம் தோழர்களிடத்தில் அதிக அன்பு செலுத்துவார். தோழர்கள் ஒவ்வொருவரும் இறைத் தூதர் நம் மீதுதான் பேரன்பு கொண்டுள்ளார் என்று கருதும் வகையில் அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்துவார்.முதலில் நல்லவர்களை நண்பர்களாய்த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். உயர்ந்த சிந்தனையும், உன்னதப் பண்புகளும் கொண்டவர்கள் நமக்கு நண்பர்களாய் வாய்த்தால் அவர்களிடமிருந்து நமக்கு நன்மையே கிடைக்கும்.பார்த்ததும் காதல் வரலாம், ஆனால் நட்பு கொள்ள சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஒரு சிலரைப் பார்த்ததும் பிடித்து அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று மனம் சொல்லும். அவை விதிவிலக்கு. அப்படி இல்லாமல், விரைவாக துவங்கும் நட்பு விரைவாகவே முடிந்தும் விடும்.நண்பரின் பழக்க வழக்கம், குணாதிசயம் மிகவும் முக்கியம். ஏனெனில், நாம் உள ரீதியாக யார் மீது அதிக அன்பு கொள்கிறோமோ அவருடைய தாக்கம் நம் மீது நிச்சயம் படியும். எனவே நபிகர் நாயகம் (ஸல்) கூறுகிறார், "மனிதன் தன்னுடைய நண்பனின் வழியிலேயே செல்கிறான். ஆகவே யாருடன் நட்பு கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொரு மனிதனும் கவனமாக இருக்க வேண்டும்." என்று.இதற்கு ஒரு உதாரணமும் உண்டு, அதாவது உங்களுக்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள், ஒருவர் உங்களை படிக்க அழைக்கிறார், மற்றொருவர் எங்காவது வெளியே செல்லலாம் என்கிறார். இதில் உங்களின் உள ரீதியான தொடர்பு யாரிடம் அதிகமாக உள்ளதோ அவருடன் தான் நீங்கள் செல்வீர்கள். இதைத்தான் மனிதன் தன்னுடைய நண்பனின் வழியிலேயே இருக்கிறான் என்பதன் அர்த்தமாகும்.
மேலும், நல்ல நண்பனின் உதாரணம் நறுமணப் பொருளை விற்பவன் போன்றதாகும். தீய நண்பனின் உதாரணம் இரும்பை உருக்கும் உலையில் உள்ள அடுப்பு ஊதும் குழல் போன்றதாகும். நறுமணப் பொருளை விற்பனனின் தோழமையால் உங்களுக்கு நிச்சயம் பயன்கள் கிட்டும். நீங்கள் நறுமணப் பொருள்களை வாங்கிச் செல்லலாம். அல்லது அந்த நறுமணப் பொருட்களின் இனிய மனமாவது உங்கள் மீது படும். ஆனால் அடுப்பில் இருந்து வெளிப்படும் தீப்பிழம்பினால் நீங்கள் வெப்பத்தைத்தான் பெற முடியும். அதிகமாக நெருங்கினால் உங்கள் ஆடையை நெருப்பு எரித்துவிடக் கூடும். எனவே யாரிடம் நட்பு கொள்கிறோம் என்பது தான் நட்புறவில் மிகவும் முக்கியமாக நோக்க வேண்டியதாகும்.நண்பர்களுக்கும், நட்புக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் இனிய பண்பாகும்.