வீர, தீரச்செயல் புரிந்த ‌சிறா‌ர்களு‌க்கு தேசிய விருது

செவ்வாய், 19 ஜனவரி 2010 (11:45 IST)
வீர, தீரச்செயல் புரிந்த 21 சிறா‌ர்க‌ள் இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய அளவில் வீர, தீரச் செயல் புரிந்த சிறுவர்-சிறுமிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு, குடியரசு தின விழாவையொட்டி தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய குழந்தைகள் நலவாரிய கவுன்சில் சார்பில் வழங்கப்படும் இந்த விருது மற்றும் பதக்கங்களை ஜனாதிபதி வழங்குவார். மேலும் தகுதியான சிறுவர்-சிறுமிகளின் கல்விச் செலவுக்கு நிதி உதவியும் வழங்கப்படும்.

அந்த சிறுவர்-சிறுமிகள் யானைகள் மீது அமர வைக்கப்பட்டு, குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்வலத்தில் அழைத்து வரப்பட்டு, கெளரவிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு, இந்த தேசிய விருதுக்கு 21 சிறா‌ர்க‌ள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8 பேர் சிறுமிகள்.

ரானு மிஸ்ரா (வயது 10), தீபக் குமார் கோரி (12) ஆகிய இருவர் பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக, அவர்களது மரணத்துக்குப் பின்னர், இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

பொதுவாக, பலரது உயிர்களைக் காப்பாற்றியதற்காகவே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியதற்காக, சிறப்பு நிகழ்வாக 3 சிறுமிகள் இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பெயர் ரேகா (11), சுனிதா மகாதோ (11), அப்சானா காதூன் (12). மே.வங்காள மாநிலம், புருலியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள், தங்களுக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி, மேற்கொண்டு படிப்பை தொடர விரும்புவதாக தெரிவித்தனர். இவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி மேலும் 35 சிறுமிகளின் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த காரணமாக அமைந்தது. இதன் காரணமாக, பலரது உயிர்களை காப்பாற்றா விட்டாலும், சமுதாயத்தில் பெரிய விழிப்புணர்வையும், மாறுதலையும் உண்டாக்கியதால் அவர்கள் தேசிய விருதுக்கு தேர்வு பெற்று உள்ளனர்.

நேற்று இந்த விருது பற்றிய விவரங்களை இந்திய குழந்தைகள் நலவாரிய தலைவர் கீதா சிஹ்தார்த்தா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்