சிக்கனமே சிறந்தது

சனி, 2 மே 2009 (17:01 IST)
அமெரிக்காவின் ராக்பெல்லர் உலகப் பணக்காரர்களில் ஒருவர். ஒரு நாள் ராக்பெல்லரை பார்த்து தங்களது பள்ளிக்காக நன்கொடை வாங்க ஒரு மாணவர் குழுவினர் வந்திருந்தனர்.

ராக்பெல்லரின் வீடு இரவு நேரத்தில், சில விளக்குகளின் உதவியோடு சற்று இருட்டாகவே இருந்தது.

ராக்பெல்லர் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்துக் கொண்டு மங்கலான ஒளியில் படித்துக் கொண்டிருந்தார்.

உள்ளே வந்த மாணவர்கள், இவரே இப்படி கஞ்சப்பிசினாரியாக உள்ளாரே, இவரா நமது பள்ளி கட்ட நன்கொடைத் தரப் போகிறார். வேண்டாம், இப்படியே திரும்பிப் போய்விடலாம் என்று கூட எண்ணினர்.

அப்போது, எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று ராக்பெல்லர் கேட்டார்.

கல்லூரியில் வகுப்பறை இல்லாமல் கஷ்டப்படுகிறோம், அதற்கு சுமார் 3 லட்சம் டாலர் செலவாகும். தாங்கள் ஒரு 500 டாலர் நன்கொடை கொடுத்தால் கூட நன்றாக இருக்கும் என்று மாணவர்கள் நம்பிக்கையே இல்லாமல் கேட்டனர்.

இதைக் கேட்ட ராக்பெல்லர் 3 லட்சம் டாலரையும் ஒரே செக்கில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

"நான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் உங்களுக்கு இந்த உதவியை செய்திருக்க முடியாது" என்று கூறினார்.

அவரது அடக்கமான பேச்சும், எளிமையும் அவரை செல்வந்தராக உயர்த்தி இருக்கும் என்பதை புரிந்து கொண்டவர்களாய் மாணவர்கள் வெளியே வந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்