அதிக வெற்றிகளைப் பெறும் முதல் குழந்தை

Webdunia

வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (13:09 IST)
வியாபாரம், தொழில் போன்றவற்றில் முதல் குழந்தைகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் 1,583 தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றுபவர்களிடம் அவர்களது பிறப்பு வரிசைப் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 43 விழுக்காட்டினர் பெற்றோருக்கு முதல் குழந்தை என்பது தெரிய வந்துள்ளது. தனது பெற்றோருக்கு 2வதாக பிறந்த குழந்தைகள் 33 விழுக்காடும், கடைசியாக பிறந்த குழந்தைகள் 23 விழுக்காடும் அளவிற்கு இருந்தனர்.

மேலும் அறிவியல் ஆய்வு அறிக்கை கூறியுள்ள ஆலோசனை ஒன்றில், முதல் குழந்தைக்கு புத்திக் கூர்மை அதிகமாக இருக்கிறது. இவர்களது திறன் பள்ளியிலேயே வெளிப்படுகிறது. முதல் குழந்தைகள், தங்களது சகோதர, சகோதரிகளை விட ஆற்றல் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளது.
இந்த புதிய ஆய்வின் மூலம், முதல் குழந்தைக்கு மேம்பட்ட கல்வியை பெற்றோர்கள் அளிக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.

webdunia photoWD
மேலும், எல்லா பெற்றோர்களும் தங்களது முதல் குழந்தையை மிகுந்த கவனிப்புடனும், பொறுப்புடனும் வளர்க்கின்றனர். அவர்கள் மீது அதிக அளவு பொறுப்புகள் திணிக்கப்படுகின்றன. மேலும், தனக்கு அடுத்தபடியாக இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். தன்னைத்தானே வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளனர்.

தங்களுடைய பதவி, பொறுப்பு, உயர் இடம் போன்றவற்றை அவர்கள் இழக்க விரும்புவதில்லை. மேலும் முதல் குழந்தைகள் அதிகளவில் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டவர்களாக உள்ளனர். எனவேதான் அவர்கள் பல்வேறு துறைகளிலும் வெற்றி பெறுகின்றனர் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பென் டாட்னர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கைகள் எல்லாம் முதல் குழந்தை சிறந்து விளங்குகிறது என்று சொல்வது இவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டதே. எனவே எத்தனையோ முதல் குழந்தைகள் வெற்றி பெறாமலும் இருக்கின்றனர். 2வது, 3வது குழந்தைகள் பெரிய பதவிகளை வகிக்கின்றனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எதற்குமே ஒரு விதிவிலக்கு உண்டு.