’சாதியால் என் மகனின் மனதை ஊனப்படுத்தாதீர்கள்’ - மாரியப்பன் தாயார்

சனி, 24 டிசம்பர் 2016 (15:12 IST)
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் வெற்றிக்குப் பிறகு குறிப்பிட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள், எங்கள் வகுப்பைச் சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடியதற்கு மாரியப்பனின் தாயார் மறுப்புத் தெரிவித்திருந்தார்.


 

ரியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் [தமிழகத்தை சேர்ந்தவர்] மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

மாரியப்பன் வெற்றி பெற்றதும் குறிப்பிட்ட சில சாதி அமைப்புகள் மாரியப்பன் தங்களது சாதியைச் சேர்ந்தவர் என்று உரிமைக் கொண்டாடினர். இதற்கு மாரியப்பனின் தாயார் உருக்கத்தோடு மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கூறியுள்ள அவர், “எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் சாதி பார்த்ததில்லை. எனக்கு அது சுத்தமாக பிடிக்காது. என் மகன் கால் பாதத்தை இழந்தபோது அவனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சாதி பார்த்தா மருத்துவம் பார்த்தார். என் மகனோடு நட்பாக இருந்த மாணவர்கள் எவரும் சாதி பார்க்கவில்லை.

அவ்வளவு ஏன் என் குடும்ப பிழைப்பிற்காக நான் கீரை விற்றபோது என்னிடம் கீரை வாங்கியவர்கள் என்னை என்ன சாதி என கேட்டுவிட்டா வாங்கிச் சென்றார்கள் என மகனின் வளர்ச்சியில் அனைத்து சாதியினருக்கும் பங்குண்டு.

என் மகன் வெற்றி பெற்றபோது கைதட்டி வாழ்த்திய வெள்ளைக்காரர்கள் எந்த சாதியை பார்த்து என் மகனை பாராட்டினார்கள்; வாழ்த்தினார்கள். என் மகனின் ஊனத்தைவிட அவனை சாதியாக பிரிப்பவர்களைத்தான் நான் ஊனமாக பார்க்கிறேன்.

அப்படி பிரிப்பவர்களிடம் நான் மன்றாடி கேட்டுக்கொள்வதெல்லாம் இந்த நொடிவரை நான் மேல்சாதி, கீழ்சாதி என்றெல்லாம் பார்த்ததும் இல்லை. எல்லோரையும் உறவுகளாக மனிதர்களாக பார்க்கிறேன். தயவு செய்து என் மகனை அந்த சாதி இந்த சாதி என கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்.

இனியாவது நாங்கள் நன்றாக பிழைத்துக்கொள்ளுகிறோம் தயவு செய்து எங்கள் வாழ்க்கையில் சாதி விசத்தை கலக்காதீர்கள்” என்று மனமுருகி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்