திருநெல்வேலி மாவட்டத்திற்கு அழகு சேர்த்து அரணாய் திகழும் பொதிகை மலையில் தாமிரபரணி நதிக் கரையில் அழகிய இயற்கை சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோயில்.
பாபநாசம் அணைக்குச் செல்லும் பாதையில் காரையார் என்ற இடத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சொரிமுத்து அய்யனார், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் பல சமூக மக்கள் வணங்கும் தெய்வமாவார்.
சுவாமி அய்யப்பன் என்ற நாமகரணத்துடன் சபரிமலை உள்ளிட்ட பல தலங்களில் வழிபடப்படும் அந்தத் தெய்வமே இங்கு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் ஆக வழிபடப்படுகிறார் என்று இக்கோயிலில் பொரிக்கப்பட்டுள்ள விவரம் கூறுகிறது.
webdunia photo
WD
குண்டலினி சாஸ்திரப்படி, நமது உடலின் ஆறு மையங்களும் சில தெய்வங்களின் தலத்தின் ஆளுமையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மூலாதாரம் என்றழைக்கப்படும் முதல் சக்கரத்தின் தலங்களாக திருவாரூர், திருப்பரங்குன்றம், சொரிமுத்து அய்யனார் கோயில்களும், சுவாதிஸ்டானம் என்றழைக்கப்படும் இரண்டாவது சக்கரத்தின் தலங்களாக திருவானைக்கா, திருச்செந்தூர், அச்சன்கோயில் ஆகியனவும், விசுத்தி என்றழைக்கப்படும் சக்கரத்தின் தலங்களாக ஸ்ரீ காளாஸ்த்திரி, திருப்பரங்குன்றம், பந்தளம் ஆகியனவும், அஜ்னா என்றழைக்கப்படும் சக்கரத்தின் தலங்களாக காசி, பழமுதிர்ச்சோலை, சபரிமலை ஆகியனவும், பிரம்மரேந்திரம் என்றழைக்கப்படும் சக்கரத்தின் தலங்களாக கையிலாயம், கதிர்க்காமம், காந்தமலை ஆகியனவும் குறிக்கப்பட்டுள்ளன.
சாதீயத்தை ஒழிக்க முத்துப் பாட்டன் என்ற பெயரோடு மானுட ரூபத்தில் வந்த அய்யப்பன் இங்கு வாழ்ந்து வந்த வாலை பகடை என்பவரின் இரண்டு பெண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து மறைந்ததாகவும், அவர்களே ஸ்ரீ சொரிமுத்து அய்யனாராகவும், அவரின் இரண்டு மனைவிகளான பொம்மக்கா, திம்மக்கா என்ற பெயர்களில் எழுந்தருளி அருள் பாலித்து வருவதாகவும் திருவிதாங்கூர் ஆவணம் கூறுகிறது.
webdunia photo
WD
அய்யப்பனுக்கு (அய்யனாருக்கு) இதுவே முதல் கோயில் என்பதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் பலரும் இங்கு வந்து விரத மாலை அணிவித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. குழந்தை வேண்டி, பசு நல்ல பால் தர வேண்டி, நோய்கள் தீரவேண்டி, வழக்கு வெற்றி கிடைக்க வேண்டி ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான மக்கள் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர்.
இக்கோயிலி்ல் காவல் தெய்வமாக பூதத்தார் வழிபடப்படுகிறார். பேச்சியம்மன் என்ற குல தெய்வம் இங்கு உள்ளது. இங்கு வரும் மக்கள் கிடா வெட்டி சாமிக்குப் படைத்து வணங்கும் வழக்கம் உள்ளது.
webdunia photo
WD
அடர்ந்த வனப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலி்ற்கு மாலை நேரத்தில் சென்றால் அங்கு நிலவும் சூழலில் புறப்பட்டு வர மனமிருக்காது. எங்கு பார்த்தாலும் மயில்கள், பாறைகளுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடி வரும் தாமிரபரணி ஆறு, இதமாய் வீசும் பொதிகை மலைக் காற்று என்று பூலோக சுவர்க்கமாகவே அவ்விடம் தெரியும்.
அமைவிடம் : திருநெல்வேலியில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் காரையார் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ளது.
தங்குமிட வசதி : பொதிகை மலை அடிவாரத்திலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் தங்கலாம் அல்லது அம்பாசமுத்திரத்தில் தங்கிக்கொண்டு இத்தலத்திற்கு வரலாம்.
விசேட நாட்கள் : தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இத்திருக்கோயிலிற்கு 2 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இத்திருக்கோயிலிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாகவும் சொல்கின்றனர்.
webdunia photo
WD
பான தீர்த்தம் அருவிக்குச் சென்று நீராடிவிட்டு, மாலை சாயும் நேரத்தில் இத்திருக்கோயிலிற்கு சென்று வாருங்கள்.