சுசீந்திரம் – கலையுடன் தழைக்கும் ஆன்மீகம்

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:08 IST)
நமது நாட்டின் ஆன்மீகப் பெருமையை பறைசாற்றுவதாகவும், தமிழ்நாட்டின் கலைப் பெருமைக்கு அத்தாட்சியாகவும் திகழும் திருத்தலம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயிலாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றங்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒன்றாக ஒருமித்து தாணுமாலயன் (தாணு= சிவன், மால்= திருமால், அயன்= பிரம்மா) என்ற திருநாமத்துடன் காட்சி தருகின்றனர்.

இத்திருத்தலத்தின் பெருமைக்குக் காரணமாக இருப்பது, பஞ்ச பாண்டவர்கள் தங்களின் வன வாசத்தின்போது இங்கு வந்து வணங்கியதும், அனுசூயாவின் கற்பை சோதிக்க வந்த மும்மூர்த்திகள், அவளுடைய கற்பின் மகிமையால் குழந்தைகள் ஆனதும், பிறகு மூவரும் இத்திருத்தலத்தின் கொன்றை மரத்தடியில் லிங்க வடிவத்தில் எழுந்தருளி காட்சியளிப்பதுமாகும்.

இந்தக் கொன்றை மரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று திருத்தலப் புராணம் கூறுகிறது.

webdunia photoWD
இத்திருக்கோயிலிற்குள் நுழைந்ததும் முதலில் வணங்கும் தெய்வமாய் காட்சியளிப்பவர் தட்சிணா மூர்த்தியாவார். இவரை வணங்கியப் பின் வசந்த மண்டபத்தையடைந்து அங்கு உமையுடன் வீற்றிருக்கும் சுசீந்தைப் பெருமானை தரிசிக்கலாம். இந்த வசந்த மண்டபத்தின் மேல் விதானத்தில் நவக்கிரங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளதைக் காணலாம். மேலே நவகிரங்கள் இருக்க கீழிருந்து வணங்கும் நிலையுள்ள ஒரே இடம் சுசீந்திரமே!

வசந்த மண்டபத்தை தாண்டி கோயிலின் பிரகாரத்திற்கு வந்ததும் நாம் தரிசிப்பது தனது தேவியுடன் அமர்ந்திருக்கும் விநாயகரே. அதன்பிறகு அந்த நீண்ட பிரகாரத்தில் நடக்கும்போது இரு புரங்களிலும் உள்ள தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் வியப்பூட்டுபவையாகும்.

இராமேஸ்வரம் கோயிலிற்குப் பிறகு மிக நீண்ட பிரகாரமாகத் திகழும் இக்கோயிலில் கருவறையைச் சுற்றி மூன்றுத் திசைகளிலும் அதனைத் தாங்கி நிற்கும் தூண்களின் சிற்பங்களை அறிவதற்கு நிச்சயம் வழிகாட்டியின் உதவி அவசியம்.

யாளிகள், விளக்கேந்தி நிற்கும் பாவைகள், சிருங்காரச் சிற்பங்கள் என்று நம் நெஞ்சைக் கவரும் கலைப் படைப்புகள்.

ஸ்ரீராமரை வணங்கி நிற்கும் ஹனுமான்

இப்பிரகாரத்தில் பிட்சாடனராய் நிற்கும் கங்காள நாதர் கோயிலும், பிரகாரத்திலிருந்து செல்லும் ஒரு தனி வழியில் மேலேறிச் சென்றால் பாறைகளால் மட்டுமே ஆன கயிலாய நாதர் கோயிலும் உள்ளது.

இக்கயிலாய நாதர் கோயில் சுவற்றில் காணப்படும் கண்வெட்டுகள் அனைத்தும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கிறது கோயில் விவரக் குறிப்பு.

தெற்குப் பிரகாரத்தில் வில்வ மரமும், அதன் மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரையும், நாக வடிவங்களையும் வணங்கிய பின்னர், அய்யப்பனின் சன்னதியை காணலாம். சேர வாசல் சாஸ்தா என்றழைக்கப்படுகிறார். இப்பிரகாரத்தின் மறுகோடியில் ஸ்ரீராமர் - சீதை சன்னதிகள் உள்ளன. இச்சன்னதியின் சிறப்பு யாதெனில், பொதுவாக ஸ்ரீ இராமர், சீதை, இலக்குவன் மூவரும் நின்ற நிலையிலேயே அருள்பாலிப்பதைக் காணலாம். ஆனால் இங்குள்ள சன்னதியில் ஸ்ரீ இராமரும், சீதையும் அமர்ந்திருக்க, வெளியே இலக்குவனும், பிரகாரத்தின் நேர் எதிர் மூலையில் 18 அடி உயரமாக நெடுந்துயர்ந்து நிற்கிறார் ஹனுமான்.


webdunia photoWD
இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் அசோக வனத்தில் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது அங்கு வந்த ஹனுமான், சீதைப் பிராட்டிக்கு தனது விசுவ ரூபத்தைக் காட்டி அளித்த காட்சி வடிவிலேயே இங்கு பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ இராம பக்த ஹனுமான் காட்சி தருகிறார்.

இக்கோயிலின் பெரும் சிறப்பாக எழுந்தருளியுள்ள ஹனுமான், பக்தர்கள் கேட்கும் வரங்களை அளிப்பவராக உள்ளார். இவருக்கு இத்திருத்தலத்தில் எப்போது பக்தர்கள் வரிசையில் நி்ன்று வடை மாலை சூட்டுவதும், வெண்ணையளித்து வழிபடுவதுமாய் இருப்பதைக் காணலாம்.

ஸ்ரீ இராமருக்கும் அவர் பக்தரான ஹனுமனுக்கும் இடையே நீண்டு பரந்த வடக்குப் பிரகாரத்தில் முருகனும் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். முருகனை வணங்கிய பிறகு பஞ்ச பாண்டவர்கள் வணங்கிய ஜயந்தீஸ்வரரை வணங்கலாம். நாராயணர், மகாதேவர், இராமேஸ்வரர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், துர்க்கை, கண்ணன் ஆகியோருக்கு இங்கு தனித்தனி கோயில்கள் உள்ளன.

இந்த வடக்குப் பிரகாரத்திலுள்ள அலங்கார மண்டபத்தில்தான் இக்கோயிலிற்கு கலைச் சிறப்புச் சேர்க்கும் இசைத் தூண்கள் உள்ளன. இந்த நான்கு தூண்களிலும் சிறு சிறு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவையாயினும் அவற்றைத் தட்டினால் பல ஓசைகள் கேட்கின்றன.

இம்மண்டபத்தின் அருகிலேயே அறம் வளர்த்த நாயகியின் சன்னதி உள்ளது. தனது பக்தியினால் இறையுடன் கலந்த 13 வயது வேளாளப் பெண்ணி்ற்காக அவருடைய குடும்பத்தார் கட்டியது இத்திருக்கோயில்.

இவைற்றையெல்லாம் கண்டு வணங்கிய பிறகு கிழக்குப் பிரகாரத்திற்கு வந்தால் அங்கு தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளிவரும் கருடாழ்வாரையும், நந்தீஸ்வரரையும் தரிசிக்கலாம். இவர்களைத் தரிசித்தப் பின்னரே இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தாணுமாலயப் பெருமானை தரிசிக்கலாம்.

லிங்க வடிவில் தாணுமாலயப் பெருமாள் காட்சி தருகிறார். தாணுமாலயனின் வலப்புறத்தில் விஷ்ணு கோயில் உள்ளது. தாணுமாலயனின் ஆலயத்தை வடகேடம் என்றும், திருமாலின் ஆலயத்தை தென்கேடம் என்றும் அழைக்கின்றனர்.

webdunia photoWD
சிவபெருமானின் லிங்கத் திருமேனி தங்கக் கவசத்துடனும், விஷ்ணுவின் திருமேனி வெள்ளிக் கவசத்தாலும் அழகூட்டப்பட்டு காட்சி தருகின்றன.

செண்பகராமன் மண்டபம்

கொடி மண்டபத்தை அடுத்து, ஆட்கொண்டான், உய்யக்கொண்டான் என்ற இருபெரும் துவாரபாலகர்களைக் கடந்து வந்தால் செண்பகராமன் மண்டபத்தை அடையலாம். இம்மண்டபத்தின் தூண்களில் இராமயண, மகாபாரத காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டும், ஓவியங்களாக வரைப்பட்டும் உள்ளன.

இத்தூண்களில் இராமர் வாலி வதம் செய்வது செதுக்கப்பட்டுள்ளது. வாலியும் சுக்ரீவரும் யுத்தம் செய்வது ஒரு தூணிலும், வில்லுடன் இராமன் நிற்பது மற்றொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ளது. இராமன் உருவம் செதுக்கப்பட்ட தூணில் இருந்து பார்த்தால் வாலியின் உருவம் தெரிகிறது. ஆனால் வாலியின் சிற்பத்தருகில் நின்று பார்த்தால் இராமன் உருவம் தெரியாது! இராமன் மறைந்திருந்து வாலியை வதம் செய்ததை அவ்வளவு சூட்சமமாக சிற்பி செதுக்கியுள்ளார்!

அமைவிடம்:
நாகர் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது இத்திருக்கோயில். இக்கோயிலின் திருக்குளம் மிகப் பெரியது, அழகானது.

விழாக்கள்:

இக்கோயிலில் மார்கழி, சித்திரை மாதங்களில் ப‌த்து நாட்களுக்கு திருவிழா நடைபெறுகிறது. ஒன்பதாவது நாள் தேர்த் திருவிழா. அன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு திருத்தேர் இழுக்கின்றனர்.

தங்குமிடம்:

நாகர் கோயிலில் தங்குமிட வசதிகள் அதிகமாக உள்ளது. போக்குவரத்து வசதி குறைவின்றி உள்ள தடத்திலேயே இத்திருத்தலம் அமைந்துள்ளது.