தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழப் பேரரசர் இராஜ இராஜ சோழர் கட்டிய வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயிலைப் போன்று, அவரது மகன் இராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய பெருவுடையார் கோயிலும் தமிழரின் கட்டடக் கலைக்கு அழகிய சான்றாய் இன்றளவும் அழியாமல் நிற்கிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து 10 கி.மீ. தூரத்திலுள்ளது கங்கை கொண்ட சோழபுரம். கும்பகோணம் செல்லும் பிரதான சாலையிலிருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ள இக்கோயில், இந்திய தொல்லியல் துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு தற்பொழுது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக (யுனிசெஃப்) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பேரரசர் இராஜ ராஜ சோழருக்குப் பின் அரியணையேறிய இராஜேந்திர சோழர், கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டியது மட்டுமின்றி, வங்கக் கடல் கடந்து கடாரம் (இன்றைய புரூனே/சாரபாக் தீவு) வரை வென்று புகழ் பெற்றவர்.
webdunia photo
WD
இப்படிப்பட்ட பெரும் வெற்றிகளுக்குப் பிறகு இராஜேந்திர சோழரின் அரசு, வடக்கே துங்கபத்திரை ஆற்றை எல்லையாகவும், தெற்கே இலங்கைத் தீவை எல்லையாகவும் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. பரந்துபட்ட பேரரசை உருவாக்கிய இராஜேந்திர சோழர், தனது தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினார். புதிதாக தலைநகரை உருவாக்கினார். அதுவே கங்கை கொண்ட சோழபுரம்.
தனது தந்தை இராஜ ராஜ சோழரைப் போல், பெருவுடையாருக்கு (சிவபெருமான்) கோயில் கட்டி, அதை மையமாகக் கொண்டு தனது தலைநகரை நிர்மாணித்தார்.
தஞ்சை பெரிய கோயிலைப் போலவே அமைப்பிலும், வடிவிலும் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டது இத்திருக்கோயில். 11வது நூற்றாண்டில் - 1030வது ஆண்டில் இக்கோயிலை கட்டிமுடித்தார் இராஜேந்திர சோழர்.
கங்கை கொண்ட சோழபுரமே அடுத்த 250 ஆண்டுகளுக்கு சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியுள்ளது.
இக்கோயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இராஜேந்திர சோழர் தனது அரண்மனையைக் கட்டியிருந்தார். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மனை காலத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து நிற்கவில்லை. இன்றைக்கு அவ்விடம் மாளிகை மேடு என்று அழைக்கப்பட்டாலும் மணல் மேடாக, ஒரு வரலாற்று சுவடாகத்தான் திகழ்கிறது. ஆனால், தான் வணங்கும் தெய்வத்திற்காக, கல்லே கிடைக்காத தஞ்சை மண்ணிற்கு பெரும் கற்களை கொண்டுவந்து நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் இராஜேந்திரனது ஆட்சிக்கும், மாட்சிமைக்கும் சான்றாக நின்று கொண்டிருக்கிறது.
webdunia photo
WD
தஞ்சை கோயிலில் காணும் பல சிறப்புக்கள் இக்கோயிலில் இல்லையென்றாலும், தெய்வீகத்திற்கும், சிற்ப, கட்டட கலைகளுக்கும் உன்னதமான சான்றாகத் திகழ்கிறது இத்திருக்கோயில்.
சுற்றிச் சுற்றிவந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று எண்ணவைக்கும் இக்கலைப் பொக்கிஷத்தை அடையாளம் கண்டு அழிவிலிருந்து காப்பாற்றி உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற தொல்லியல் துறை மிகுந்த பாராட்டிற்குறியது.
இவ்விடத்திற்குச் செல்ல...
சென்னையிலிருந்து 250 கி.மீ. தூரத்தில், கும்பகோணம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் குறுக்கிடும் ஜெயங்கொண்டம் கூட்டுச் சாலையில் இறங்கி, அங்கிருந்து மேற்காக 4 கி.மீ. தூரம் சென்றால் கங்கை கொண்ட சோழபுரத்தை அடையலாம்.
தங்குமிடம் : கும்பகோணத்தில் தங்கிக்கொண்டு ஒரு மணி நேர பயணத்தில் இவ்விடத்திற்கு வரலாம்.