சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் மகா கந்தசஷ்டி விழா வரும் 29ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
29ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை மகா கந்த சஷ்டி இலட்சார்ச்சனை விழா நடைபெறவுள்ளது. இதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாள் மாலையிலும் சாமி புறப்பாடு மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 3ஆம் தேதியன்று மாலை 7 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி தெற்கு கோபுர வாயிலில் நடைபெறும். மறுநாள் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், டாக்டர் சீர்காழி கோ. சிவ சிதம்பரம், துணை ஆணையர்/செயல் அலுவலர் பி. வாசுநாதன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.