நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

Mahendran

சனி, 21 டிசம்பர் 2024 (10:46 IST)
நேற்று நெல்லை நீதிமன்றம் முன்பு பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன், 25 வயது மாயாண்டி, குற்ற வழக்குகள் தொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று தனது சகோதரருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த மர்ம கும்பல் மாயாண்டியை வெட்டுவதற்காக ஓடி வந்தனர்.

மாயாண்டியும் அவரது சகோதரரும் தப்பி ஓடினார்கள். எனினும், காரில் வந்த கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார்.

பின்னர், காரில் ஏறி தப்பும் முயற்சியில் இருந்த கொலையாளிகளில் ஒருவரை அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிடித்த நிலையில், மற்றவர்கள் தப்பிவிட்டனர்.

இது குறித்து உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்திய நெல்லை மாநகர காவல் ஆணையர், மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் இன்னும் சில தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்