குழந்தைக்கு மது கொடுத்து ரசித்த இளைஞர்கள்: தமிழகத்தில் நடந்த கொடுமை!

திங்கள், 6 ஜூலை 2015 (20:37 IST)
திருவண்ணாமலையில் இளைஞர்கள் குழந்தையை மது குடிக்க வைத்திருக்கின்றனர். குழந்தை மது குடிப்பதை இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தமிழகத்தில் தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது இளைஞர்கள் மத்தியில் பயம் இருந்தது. காரணம், காவல்துறையினர் பிடித்து சென்று விடுவார்கள் என்பதுதான்.
 
தற்போது அரசே நடத்துவதால் சாலை மற்றும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குடிமன்னர்கள் குடித்துவிட்டு அலங்கோலமான நிலையில்தான் கிடக்கிறார்கள். இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களிலும் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.
 
இத்தகைய கொடுமை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு காட்டுப்பகுதியில் 4 வயதுடைய குழந்தையை சுற்றி 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றி நிற்கின்றனர். நடுவில் இருக்கும் குழந்தைக்கு ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை கொடுத்து குடிக்க வைக்கின்றனர் இளைஞர்கள். குழந்தையின் அருகில் TN25AJ 8209 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழங்குப்பத்தில் நடந்துள்ளது.
 
இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த கிராமத்திற்கு போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர்  விரைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்