காமுகர்கள் கையில் இளம்பெண்; காப்பாற்றிய இளைஞர் : சென்னையில் ஒரு நிஜ ஹீரோ

திங்கள், 25 ஜூலை 2016 (12:33 IST)
ஆலந்தூர் பகுதியில், மூன்று காமுகர்களிடம் சிக்கிய இளம்பெண்ணை காப்பாற்று சென்ற போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு வாலிபர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
வசந்த்பால் என்பவர் சென்னையில் வசிக்கும் ஒரு இளம் புகைப்படக் கலைஞர். இவர் கடந்த 23ஆம் தேதி அன்று நள்ளிரவில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டக்கூடிய அனுபவத்தை பற்றி எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
என் உடம்பில் தற்போது சில காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அதற்காக நான் பெருமைப்படுகிறேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. நான் கபாலி படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு, எனது நண்பர்கள் சிலரை சந்தித்து விட்டு வீது திரும்பிக் கொண்டிருந்தேன்.
 
நான் ஆலந்தூர் வழியாக சென்ற போது சிறுநீர் கழிப்பதற்காகவும், புகைப்பிடிப்பதற்காகவும் எனது மோட்டார் சைக்கிளை  சாலையோரம் நிறுத்தினேன். அப்போது, நான் நின்றிருப்பதற்கு வலது புறம் ஒரு வெட்ட வெளியான இடம் இருந்தது. அங்கு யாரோ முனகுவது போல் எனக்கு சத்தம் கேட்டது. முதலில் அது ஒரு பூனையோ அல்லது வேறு ஏதோ ஒரு விலங்கு என்று நினைத்தேன். ஆனால், கேட்க கேட்க அது ஒரு பெண்ணின் குரல் என்பதை புரிந்துகொண்டேன். 


 

 

 
அந்த குரல் கேட்கும் திசை பார்த்து வேகமாக நடந்து சென்றேன். அப்போது அங்கு மூன்று வாலிபர்களிடம் ஒரு இளம்பெண் சிக்கியிருந்தாள். அவர்கள் ஹிந்தி மொழி பேசும் வட நாட்டை சேர்ந்தவர்கள்.
 
மேலும், அவர்கள் மது போதையில் இருந்தார்கள். ஒருவன் பிடித்துக் கொள்ள, மற்ற இருவர்கள் அந்த பெண்ணின் ஆடையை கழற்றும் முயற்சியில் இருந்தனர். அவர்களிடம் சிக்கியிருந்த பெண் “அண்ணா.. அண்ணா என்னை காப்பாற்றுங்கள்” என்று அலறினாள்.
 
இதைக் கண்டவுடன் நான் உடனே அங்கு சென்று அவர்களிடம் சண்டையிட்டேன்.  அப்போது ஒருவன் ஒரு கயிறால் கழுத்தை நெறித்தான். இதைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிய அந்த பெண், சாலைக்கு வந்து, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒட்டுனரை உதவிக்கு அழைத்து வந்தாள். அந்த ஓட்டுனரும் அவர்கள் தாக்கினார். உடனே அவர்கள் என்னை விட்டு விட்டு ஓடிவிட்டனர்.
 
இயல்பாக மூச்சு விட எனக்கு சில நிமிடங்கள் ஆனது. அந்த பெண் கேட்டுக் கொண்டதால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இதில் சோகம் என்னவென்றால், ஏதேனும் போலீஸ் அதிகாரிகள் என் கண்ணில் படுகிறார்களா என்று அரை மணி நேரத்திற்கும் மேல் அந்த பகுதியில்  சுற்றி வந்தேன். ஆனால், ஒரு போலீசார் கூட என் கண்ணில்படவில்லை. அந்த காமுகர்களை என் நண்பர்கள் உதவியுடன் விரைவில் பிடிப்பேன். 
 
நீங்கள் தனியாக இருக்கும்  ஒரே காரணத்திற்காக எதற்கும் பயப்படாதீர்கள். உங்கள் நோக்கம் சரி எனில், உலகம் உங்களுடன் நிச்சயம் கை கோர்க்கும். ஆபத்திலிருக்கும் மற்றவர்களை காப்பாற்ற உதவுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், அந்த காமுகர்கள், கயிற்றில் அவரின் கழுத்தை நெறித்த போது, ஏற்பட்ட காயத்தை புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்துள்ளார் வசந்த்பால்.

 
சென்னையில், சமீபத்தில் இளம் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட ஒரு இளம்பெண், ஒரு ஓலோ கார் ஓட்டுனரிடம் தனக்கு ஏற்பட்ட பகீர் அனுபவத்தை தன்னுடைய முகநூலில் எழுதியிருந்தார். 
 
இந்நிலையில், வசந்த்பால் என்பவர் எழுதியுள்ள இந்த பதிவு சென்னை பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதா என்ற விவாதத்தை சமூக வலைத்தளத்தில் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்