அதுக்கிட்ட சிக்குனா எதுவும் மிஞ்சாது?? – அபாய எறும்புகளால் கிராமத்தை விட்டு ஓடும் மக்கள்!

வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (11:52 IST)
உலகின் ஆபத்தான வகை பூச்சிகளில் ஒன்றாக உள்ள மஞ்சள் பைத்திய எறும்புகள் திண்டுக்கல் மலை கிராமங்களில் புகுந்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கரந்தமலை பகுதியில் உள்ள கிராமங்களில் வினோதமான எறும்புகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். மனிதனின் உடலில் வேகமாக ஏறும் இந்த எறும்பு குறிப்பாக கண்களை கடிப்பதாகவும், அவை உடலில் ஏறுவதால் கொப்புளங்கள் ஏற்படுவதாகவும், மலைப்பகுதிகளில் இந்த எறும்புகள் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வேலாயுதம்பட்டி காப்புக்காடு மலைப்பதிகளில் ஆய்வு செய்து சில எறும்புகளை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

அவற்றை ஆராய்ந்ததில் அவை “மஞ்சள் பைத்திய எறும்புகள்” என்றும் இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியத்தின் உலகின் 100 ஆபத்தான உயிரினங்களில் இதுவும் ஒன்று என்றும் தெரிய வந்துள்ளது. இந்த எறும்புகளுக்கு பயந்து அப்பகுதி கிராமத்தினர் பலர் ஊரை விட்டே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இந்த எறும்புகள் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகம் உள்ளன. பல்கி பெருகும் இவை பட்டாம்பூச்சி, கம்பளிபூச்சி உள்ளிட்ட பிற பூச்சி இனங்களின் பரவலை வெகுவாக குறைத்துவிடக் கூடியவை. ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இறங்கிய இந்த எறும்புகள் அங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகளை கொன்று தின்று அழித்ததாக வனவிலங்கு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்