மீண்டும் தொடங்கும் தவெக பிரச்சாரம்? அடுத்த வாரம் அவசர பொதுக்குழு!? - விஜய் திட்டம் என்ன?

Prasanth K

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (12:40 IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து அடுத்த வாரம் தவெக பொதுக்குழுவை விஜய் கூட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிய விஜய், அதன் பின்னர் பிரச்சாரங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.

 

பெரும்பாலும் வெளியே தலைக்காட்டாமல் இருந்து வந்த அவர், நேற்று கரூரில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து சந்தித்தார். அவர்களிடம் விஜய் கண்ணீர் மல்க பேசியதாகவும், அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் விஜய்க்கு ஆறுதல் சொல்லி, தங்களுக்கு விஜய் மீது கோபம் இல்லையென்றும் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தேற்றுதல் விஜய்க்கு நம்பிக்கையை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மீண்டும் தேர்தல் பணிகளை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தவெக பொதுக்குழுவை அடுத்த வாரத்தில் விஜய் கூட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

அந்த பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் பல ஆலோசனைகள், பயிற்சிகளை வழங்குவது குறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்