ஸ்டாலினுக்கு முக்கிய பதவி? - பொதுக்குழுவுக்காக காத்திருக்கும் திமுக தொண்டர்கள்

திங்கள், 26 டிசம்பர் 2016 (23:57 IST)
வருகின்ற புத்தாண்டின் தொடக்கத்திலேயே [ஜனவரி 4] திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்று திமுக தரப்பு எதிர்பார்ப்பில் உள்ளது.


 

கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 7ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை குறைப்பதற்காக 'டிரக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், கருணாநிதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது போன்ற புகைப்படமும் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை [23-12-16] அன்று கருணாநிதி அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம், வரும் 4ஆம் தேதி நடைபெறும் என்று  கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

கடந்த அறிவிப்பின்போதே மு.க.ஸ்டாலினுக்கு கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 2017ஆம் ஆண்டின் முதல் பொதுக்குழுக் கூட்டம் என்பதால், சில முக்கிய முடிவுகள் திமுக தரப்பில் அறிவிக்கப்படம் என்று திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த ஆவலோடு உள்ளனர்.

தற்போது கட்சியின் பொருளாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் ஸ்டாலினுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் பட்சத்தில் திமுகவில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்று திமுக நிர்வாகிகள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்