காட்டு யானை மிதித்து தோட்ட காவலாளி உயிரிழப்பு: கிராம மக்கள் போராட்டம்

வியாழன், 31 மார்ச் 2016 (08:20 IST)
கூடலூர் அருகே காட்டு யானை மிதித்து தோட்ட காவலாளி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காவலாளியின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


 


நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பார்வுட் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் இரவு நேர காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
 
பணி முடிந்து காலை எஸ்டேட்டில் இருந்து தனது நண்பர் விசுவநாதனுடன், தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த ஒரு காட்டு யானை அவர்களை ஓடஓட துரத்திச் சென்றது. இதனால் பீதி அடைந்த ராதாகிருஷ்ணன், விசுவநாதன் ஆகியோர் வெவ்வேறு திசைகளில் ஓடத் தொடங்கினர்.
 
இந்நிலையில், அந்த காட்டு யானை ராதாகிருஷ்ணனை பிடித்தது. அவரை அந்த யானை மிதித்து கொன்றது.
 
ராதாகிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் காட்டு யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர். தப்பியோடிய விசுவநாதன் மேலும் காபி தோட்டத்துக்குள் புகுந்து  ஓடி உயிர் தப்பினார். 
 
பின்னர், ராதாகிருஷ்ணனின் உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இதை அறிந்த கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
 
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், மற்றும் வன அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு இறந்து கிடந்த ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்தனர்.
 
இதைப் பார்த்து, ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அவருடைய உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அப்போது, ராதாகிருஷ்ணனின் உடலை எடுத்து தங்களது வேனில் ஏற்றிய காவல்துறையினர் கூடலூர் நோக்கிப் புறப்பட்டனர்.
 
அப்போது, அங்கு திரண்டிருந்த கிராம மக்கள் ராதாகிருஷ்ணனின் உடலை எடுத்து செல்லும் காவல்துறையினரின் வாகனத்தை தடுத்து முற்றுகையிட்டனர்.
 
இதைத் தொடர்ந்து, கிராம மக்களிடம் துணை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, காட்டு யானைகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
 
பின்னர், ராதாகிருஷ்ணன் உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்