ஜெயலலிதாவை நீதிமன்றம் கண்டித்தது ஏன்? - கருணாநிதி விளக்கம்

திங்கள், 5 செப்டம்பர் 2016 (16:20 IST)
ஜெயலலிதா அரசுக்கு, விரிவான முறையில் தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தது ஏன் என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கியுள்ளார்.
 

 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
 
”மன்னர் ஆட்சி பல ஆண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதே? 
 
குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்துவது சம்பந்தமான வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு 2-9-2016 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறிய கருத்து: “மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு அவசர அவசரமாக அரசாணை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைவர் பதவிக்கான முறையான விளம்பரம் செய்து, அந்தத்  துறைபற்றி அனுபவம் வாய்ந்தவர்கள்தான் அந்தப் பதவிக்கு வரமுடியும்.
 
இவை எதையுமே பின்பற்றாமல் திடீரென ஒருவருக்கு இந்தப் பதவியை வழங்கியிருப்பது வேதனையளிக்கிறது. இந்த நியமனம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட நேரிடும்” என்று ஜெயலலிதா அரசுக்கு, விரிவான முறையில் தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
 
அரசின் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு மாறாக, எந்த முறையில் கல்யாணி நியமிக்கப் பெற்றார் என்று வினா எழுப்பினர்.  கல்யாணியை மதுரை பல்கலை துணைவேந்தராக நியமித்தது செல்லாது என்று 2014ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
 
“மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, அதற்கு மாறாக, மக்களை நேரடியாகச் சந்திப்பதுமில்லை; மக்கள் குறைகளை நேரில் கேட்பதுமில்லை.

“நானே மாநிலம்;  நானே எல்லாம்;  எல்லாம் எனக்குத் தெரியும்; என் சொல்லே எதிலும் இறுதிக் கட்டளை” என்ற பாணியில் செயல்படக்கூடிய ஜெயலலிதா அரசை மன்னர் ஆட்சிக்கு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்  தலைமை நீதிபதி”.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்