கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் கமல் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் திமுக, அல்லது அதிமுக வாக்குகளை பிரிக்கும் சக்தியாகத்தான் இருப்பார்களே தவிர வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 40 வேட்பாளர்களும் டெபாசிட் திரும்ப பெற்றாலே அது கமலுக்கு மிகப்பெரிய வெற்றி என்று சொல்பவர்களும் உண்டு
இந்த நிலையில் திடீரென நேற்று கமல் அளித்த பேட்டி ஒன்றில் 'ரஜினியிடம் ஆதரவு கேட்டுள்ளேன். அவர் தருவதாக உறுதி அளித்துள்ளார். ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். ரஜினி, கமலை கடைசியாக சந்தித்தது அவரது மகள் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க சென்றபோதுதான். அன்றைய சந்திப்பில் கமல், ரஜினியிடம் ஆதரவு கேட்டாரா? என்று தெரியவில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் அதற்கு பின்னர் வெளியிட்ட ஒரு தெளிவான அறிக்கையில் தான் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி கூறியுள்ளார். அதன்பின்னரும் ரஜினி தன்னை ஆதரிப்பார் என்று நம்புவதாக கமல் கூறுவது என்ன நியாயம்? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது