வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவே அருண் ஜேட்லி - ஜெயலலிதா சந்திப்பு: தமிழிசை விளக்கம்

புதன், 21 ஜனவரி 2015 (12:27 IST)
நாடாளுமன்றத்தில் மக்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு கேட்கவே மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜெயலலிதாவை சந்தித்தார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
 
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து பல சர்ச்சைகளை கிளப்புகிறார்கள். இதற்கு முன்பு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும், வெங்கையா நாயுடுவும் ஜெயலலிதாவை சந்தித்தபோது இதேபோல் சர்ச்சை கிளப்பினார்கள். இவர்கள் எல்லாம் ஊழலில் திளைத்தவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தவர்கள்தான்.
 
நாடாளுமன்றத்தில் மக்கள் நலனுக்கான வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு கேட்டுத்தான் ஜெயலலிதாவை அருண் ஜேட்லி சந்தித்தார். பாஜக நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முனைப்புடன் செயல்படுகிறது.
 
எனவே இந்த சந்திப்பின்போது எந்த பூனைக்குட்டியும் வெளியே வரவில்லை. யானைக்குட்டியும் வெளியே வரவில்லை. இதற்கு அருண் ஜேட்லி விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. மாநில தலைமை விளக்கம் அளித்தால் போதுமானது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்