மக்களவை தேர்தலுக்கு சரியாக ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. அவ்வாறாக திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் நேற்று இரவு பிரச்சாரத்திற்கு சென்றபோது அங்கு பெட்டிக்கடை வைத்துள்ள சங்கீதா என்ற பெண் உட்பட சிலர் நாப்கினுக்கு ஜிஎஸ்டி ஏற்றியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாஜகவினரின் இந்த செயல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா “முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் ! கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.