நாங்க இல்லைனா ஜெயலலிதாவே இருந்திருக்க மாட்டார்: உரிமை கொண்டாடும் திவாகரன்!
திங்கள், 16 ஜனவரி 2017 (11:53 IST)
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அந்த கட்சியின் பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. தற்போது சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தின் தலையீடு அதிமுகவில் அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஜெயலலிதா இருக்கும் போது சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் துரத்தினார். பின்னர் சசிகலாவை மட்டும் அனுமதித்த ஜெயலலிதா கடைசி வரை சசிகலாவின் குடும்பத்தினரை சேர்க்கவே இல்லை. அவர்களை துரோகிகள் என குறிப்பிட்டார் ஜெயலலிதா.
ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லாததால் சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் அதிமுகவில் நுழைந்துவிட்டனர். குறிப்பாக சசிகலாவின் தம்பி திவாகரன் அதிமுகவில் முக்கிய நபராக மாறியுள்ளார்.
இந்நிலையில் பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திவாகரன் அதிமுகவை எம்.ஜி.ஆருக்கு பின்னர் காப்பாற்றியது தங்கள் குடும்பம் தான் எனவும் நாங்கள் இல்லையென்றால் ஜெயலலிதாவும் இருந்திருக்கமாட்டார், அதிமுக என்ற கட்சியும் இருந்திருக்காது என்றார்.
பொங்கல் விழாவில் திவாகரன் பேசியதாவது, அதிமுகவின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது. இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல. இப்போதும் எவ்வளவோ சதிகள் நடந்துகொண்டிருக்கிறது. எது நடந்தாலும் எங்கள் சடலத்தின் மீதுதான் நடக்கும்.
அதிமுகவை காப்பாற்றிய நடராஜனுக்கு எதிராக 2011-இல் மிகப்பெரிய சதி நடந்தது. அம்மாவைவிட்டு எங்களையெல்லாம் நகர்த்தினால் போதுமென்று நினைத்தார்கள். அது நடக்கவில்லை, எது செய்தாலும் திறந்த மனநிலையில்தான் செய்துவருகிறோம்.
புரட்சித்தலைவருக்கு பிறகு அதிமுகவை கட்டிக்காத்ததில் மிகப்பெரிய பங்கு நமக்கு உண்டு. அதில் மிகப்பெரிய பங்கு முனைவர் ம. நடராஜனுக்கு உண்டு. அதை எல்லோரும் மறந்திடலாம். நான் மறக்கமாட்டேன். ஏனென்றால், நானும் அவரும் இணைந்து செயல்பட்டிருக்கிறோம்.
எங்கள் உயிர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையெல்லாம் துச்சமென மதித்து கட்சியை கைப்பற்றினோம். நாங்கள் இல்லை என்றால் ஜெயலலிதா என்கிற ஒருவர் கிடையாது. கட்சியும் இந்நேரம் இருக்காது. எங்கள் தியாகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.