109 ஏக்கர் நிலத்தை ஈஷா யோகா மையம் விதிமீறி ஆக்கிரமிப்பா? - இன்று விசாரணை

வெள்ளி, 3 மார்ச் 2017 (09:46 IST)
ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறி கட்டிடங்களை கட்டி வருவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


 
ஈஷா யோகா மையம் 1 லட்சம் சதுர அடி பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக வெள்ளிங்கிரி மலை பழங்குடி பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

3 மண்டபம் மற்றும் ஒரு சிலை கட்ட 1 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், “மத வழிபாட்டை கருத்தில் கொண்டு 19.45 ஹெக்டேர் விளை நிலத்தை மாற்ற 2016 அக்டோபர் 8 மற்றும் 2017 பிப்.15ல் கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். ஈஷா யோகா மையம் விதி முறைகளை மீறி கட்டிடங்களை கட்டி வருகிறது.

109 ஏக்கர் நிலத்தில் உரிய அனுமதி இன்றி அங்கீகாரம் பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற கட்டிடங்களுக்கு உரிய அபராதம் வசூலிக்கப்படாததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 112 அடி அளவில் சிவன் சிலை அமைக்கப்பட்டது குறித்த ஆவணங்களை ஈஷா மையத்திடம் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்