விஷ்ணுபிரியா தற்கொலை குறித்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும்: உயர் நீதிமன்றம்

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (13:44 IST)
விஷ்ணுபிரியா தற்கொலை குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சிபிசிஐடி நடத்தும் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 18 ஆம் தேதி  தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
 
இந்த வழக்கை சிபிசிஐடி கால்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை முறையாக விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிசிஐடி முறையாக தற்போது விசாரணை நடத்திவருகிறது எனவே சிபிஐ விசாரணை அவசியம் இல்லை என்று கூறினார்.
 
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இது குறித்து, நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்