தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்த பெண்ணும் பலி

வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (05:58 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர், தான் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
 

 
ஜூலை மாதம் 30ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி. பாளையம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான நவீனாவின் வீட்டிற்குள் புகுந்த செந்தில் என்ற இளைஞர் பெட்ரோலை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணையும் கட்டிப்பிடித்தார்.
 
இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் அன்றே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நவீனா புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
 
ஒரு தலைக்காதலா?
 
இந்த சம்பவத்தின் காரணமாக வி. பாளையத்தில் பதற்றம் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
செந்தில் நவீனாவை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறிவந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரயில்வே பாதையில் கை - கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
 
அதற்குப் பிறகு, நவீனாவின் பெற்றோரின் தூண்டுதலின் பேரிலேயே தான் தாக்கப்பட்டு கை-கால்கள் வெட்டப்பட்டதாக செந்தில் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், அவர் ரயிலில் அடிப்பட்டதிலேயே கைகால்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
இதற்குப் பிறகு நவீனாவும் அவரது குடும்பத்தினரும் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் நவீனாவை அவர் தொந்தரவு செய்து வந்ததாக அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்