மாணவிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து பின்னர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பின்னர் சமீபத்தில் இது அடுத்து கல்வியாண்டில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை வரவேற்றுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஏழை, எளிய மாணவிகள் பயன் அடையும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தேமுதிக வரவேற்கிறது. அதேபோன்று, பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரியுள்ளார்.
முன்னதாக பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை தாமதமாவது குறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத்தின் நிதிநிலை மெல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும், நிதிநிலை மேம்பட்ட பின் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.