மத்திய அமைச்சர்களை சந்தித்தார் விஜயகாந்த்: தமிழகத்தின் திட்டங்களுக்கு உதவ கோரிக்கை

புதன், 29 ஏப்ரல் 2015 (10:45 IST)
டெல்லியில் மத்திய அமைச்சர்களை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழக திட்டங்களுக்கு உதவுமாறு கோரிக்கைவிடுத்தார்.
 
காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு தடை விதிப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையிலான அரசியல் கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவினர் டெல்லி சென்றனர்.
 
அவர்கள் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அன்று மாலை விஜயகாந்த், தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்தார்.
 
அப்போது அவரிடம், தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசியசாலை திட்டங்கள், தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் நடைபெறும் மேம்பாலங்கள் மற்றும் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். 
 
இதைத் தொடர்ந்து விஜயகாந்த், நகர மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவாகரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அவரிடம் தமிழகத்தில் நிலுவையில் உள்ள நலத்திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 
 
பின்னர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை விஜயகாந்த் சந்தித்தார். ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
இதைத் தொடர்ந்து, விஜயகாந்த் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்து, தமிழக அரசின் ரூ.2 லட்சம் கோடி கடன் சுமைக்குத் தீர்வு காண வேண்டும், நிதி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் நிலுவையில் உள்ள நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்