நேற்று முளைத்த காளான் விஜய்.. களத்துக்கு வாங்க வெச்சு செய்றோம்! - அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

Prasanth Karthick

திங்கள், 26 மே 2025 (12:12 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்து தவெக விஜய் விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு ஏற்பாடு செய்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், முதல்வர் டெல்லி சென்றது, ரெய்டுகளில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகதான் என விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்திற்காக சென்றார். அங்கும் மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் கல்வி நிதியை விடுவித்தல், மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை அதிகரித்தல் உள்ளிட்ட மாநில அரசின் நலன்களுக்காக தீவிரமாக பல வலியுறுத்தல்களை முன் வைத்தார்.

 

எங்களுக்கு மடியில் கனமில்லை. மற்ற கட்சிகளை போல சுற்றி வந்து பாஜகவோடு கள்ள உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஆனால் நேற்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் களத்திற்கு வரட்டும். அவர்கள் எந்த வகையில் அடிக்கிறார்களோ, அதை விட 100 மடங்கு வலுவாக ஒரே அடியில் பிடறி சிலிர்க்கும் விதமாக அடிக்க திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. அடுத்த தேர்தலிலும் திமுகவை சிம்மாசனத்தில் அமர வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்