செப்டம்பரில் கனமழை பெய்யும்: நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Siva

திங்கள், 1 செப்டம்பர் 2025 (09:30 IST)
செப்டம்பர் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் இந்த மாதம் அதிக மழைக்கு வாய்ப்பு எனவும், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இதுகுறித்து கூறுகையில், கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நீண்டகால சராசரியைவிட 6% அதிகம். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 268.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, இது இயல்பைவிட 5.2% அதிகமாகும்.
 
செப்டம்பர் மாதத்தில் நீண்டகால சராசரியைவிட 109% அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், மற்றும் தென்னிந்திய தீபகற்ப பகுதிகள் தவிர்த்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பெய்யும்.
 
உத்தரகண்ட் மாநிலத்தில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படக்கூடும். 
 
ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை, வெள்ள பாதிப்புகள் இருக்கும். பஞ்சாப் மாநிலத்தில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் அடுத்தடுத்து மேக வெடிப்புகள் காரணமாக பெரும் சேதங்கள் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்