கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தவெக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நெரிசல் ஏற்பட்டபோதும் தவெக நிர்வாகிகள் கூட்டத்தை விட்டு சென்றுவிட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், விபத்திற்கு காரணமாக இருந்ததாக கூறி விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த தவெக, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளது.
சம்பவத்தில் தமிழகக் காவல்துறை செய்த தவறுகளை எடுத்துரைப்பது, இந்த துயரச் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோருவது, கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.