இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

வெள்ளி, 24 அக்டோபர் 2014 (11:24 IST)
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.
 
எஸ்.எஸ்.ஆர். அல்லது எஸ்.எஸ்.ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் (86), இலட்சிய நடிகர் என்ற பட்டம் சூட்டப்பட்டவர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு 'பராசக்தி'யில் நடித்தவர். மேலும் 'வானம்பாடி', 'அவன் பித்தனா', 'மனோகரா', 'ரத்தக் கண்ணீர்', 'முதலாளி', 'குலதெய்வம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பெயர் பெற்றவர். 
 
1957ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம், இவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது. இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா உள்ளிட்ட பல படங்கள், இவரது புகழுக்குக் கட்டியம் சொல்பவை.
 
திரையுலகிலிருந்து அரசியலில் கால் பதித்து வெற்றி கண்டார். 1962ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1970 முதல் 1976 வரை பணியாற்றினார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். 

வெப்துனியாவைப் படிக்கவும்